திருப்பத்துார் மாவட்ட பதிவாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததற்கும், அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பணியிடை நீக்கம்

சென்னை, ஜூன் 13-
திருப்பத்துார் மாவட்ட பதிவாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததற்கும், அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பணியிடை நீக்கம்
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட பதிவாளர்கள் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் ஏ.செந்தூர்பாண்டியன் தன்னை பணியிடை நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பொதுவாக அரசு ஊழியர்களின் பணியிடை நீக்கம் உத்தரவில் இந்த ஐகோர்ட்டு தலையிடுவது இல்லை. ஆனால், இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, பதிவுத்துறை உயர் அதிகாரிகள் மீது மனுதாரர் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
எனவே, மனுதாரரை பணியிடை நீக்கம் செய்த உத்தரவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டேன். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அந்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இடைக்கால தடை
அதை ஆய்வு செய்தபோது, மொத்த பக்கங்களில் 41 மற்றும் 42 ஆகிய பக்கங்கள் மட்டும் கையால் எழுதப்பட்டு, இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து பக்கங்களும் தட்டச்சு செய்யப்பட்ட நிலையில், இந்த 2 பக்கங்கள் மட்டும் கையால் எழுதப்பட்டு திடீரென சொருகியுள்ளனர். அதுமட்டுல்ல, இதை தொடர்ந்து வரும் அடுத்தடுத்த பக்கங்களின் எண்கள், ‘ஓவர்ரைட்டிங்’ செய்தும், ‘ஒயிட்னர்’ பயன்படுத்தியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களில் பல்வேறு அதிகாரிகள், கடந்த 1-ந்தேதிதான் கையெழுத்திட்டு உள்ளனர்.
மனுதாரரை பணியிடை நீக்கம் செய்ய அடிப்படையாக அமைந்த அரசாணையும், அன்றைய தினமே பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது மிகப்பெரிய ஆச்சரியத்தை தருகிறது. எனவே, அரசுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான முகாந்திரம் உள்ளது. இந்த மனுவுக்கு வருகிற ஜூலை 6-ந்தேதிக்குள் தமிழ்நாடு அரசு, பதிவுத்துறை ஐ.ஜி., உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்.
அதுவரை பணியிடை நீக்கம் உத்தரவின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மனுதாரருக்கு எதிராக மேற்கொள்ளவும், பணியிடை நீக்கத்துக்கும் இடைக்கால தடை விதிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
…………………
\

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version