முன்கூட்டி விடுதலை செய்ய மறுத்த ஆளுநரின் உத்தரவு செல்லும் என நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் ஆர்.பூர்ணிமா
தண்டனைக் கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு மற்றும் முன்கூட்டி விடுதலை வழங்கும் விஷயத்தில், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்து, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
முன்கூட்டி விடுதலை செய்ய அரசு பரிந்துரைத்தும், அந்த கோரிக்கைகளை ஆளுநர் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள், இரு வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
முன்கூட்டி விடுதலை செய்ய மறுத்து ஆளுநர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு வழக்கில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அடங்கிய அமர்வு, முன்கூட்டி விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரைத்தும், கொடுங்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட கைதியின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது எனவும், இந்த விஷயத்தில் ஆளுநர் சுயமாக செயல்பட முடியாது எனவும் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
மற்றொரு வழக்கில், இந்த உத்தரவுக்கு மாறாக, உரிய பிரிவுகளில் வழக்கு தொடரப்படாததைச் சுட்டிக்காட்டி, அமைச்சரவை பரிந்துரைத்தும், முன்கூட்டி விடுதலை செய்ய மறுத்த ஆளுநரின் உத்தரவு செல்லும் என நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் ஆர்.பூர்ணிமா அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இரு அமர்வுகள், இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளதால், முன்கூட்டியே விடுதலை செய்வது, தண்டனைக் குறைப்பு வழங்குவது போன்ற விஷயங்களில் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்து, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
அதற்கு ஏதுவாக, இந்த எட்டு வழக்குகளையும், தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், எந்தெந்த சூழ்நிலைகளில் அமைச்சரவை பரிந்துரைக்கு மாறாக ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்பதையும் மூன்று நீதிபதிகள் அமர்வு முடிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.