மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து
விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், புளியந்தோப்பு காவல் ஆய்வாளருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து
செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரிடம், மயிலாப்பூரை சேர்ந்த விஜயகிருஷ்ணன் என்பவர் தனது மாமனார் சொத்து பத்திரத்தை அடமானமாக வைத்து ஆறு லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். அடமானமாக வைத்திருந்த சொத்து பத்திரங்களை வேணுகோபால் திருடி விட்டதாக விஜய கிருஷ்ணன் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி வேணுகோபாலுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். அதன்படி மூன்று நாட்கள் விசாரணைக்கு ஆஜரான போது, சொத்து பத்திரங்களை விஜய கிருஷ்ணனிடம் திருப்பிக் கொடுக்கும்படி மிரட்டியதாக கூறி, புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் ரவி, உதவி ஆய்வாளர் ஷஜிபா ஆகியோருக்கு எதிராக வேணுகோபால் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், ஆய்வாளர் ரவி மற்றும் உதவி ஆய்வாளர் ஷஜிபாவுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், இருவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஆய்வாளர் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம் சுந்தர் மற்றும் ஹேமந்த் சந்தன் கவுடர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆய்வாளர் ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி. அலெக்சிஸ் சுதாகர், விஜய கிருஷ்ணனின் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை குறித்து விசாரிக்கும் நோக்கத்தில் மட்டுமே வேணுகோபாலை காவல் நிலையத்துக்கு அழைத்ததாகவும் , காவல் ஆய்வாளர் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்காமல் மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் வாதிட்டார்.
இந்த வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைப்பது, மனித உரிமை மீறல் ஆகாது என்றும், விசாரணையின் போது புகார்தாரரான வேணுகோபால் துன்புறுத்தப்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் கூறி, ஆய்வாளர் ரவிக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதேபோல ஆய்வாளர் ரவிக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்த உத்தரவையும் நீதிபதிகள் ரத்து செய்தனர்.