மதுரையில் ஐ.என்.டி.யு.சி., போட்டி தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து, திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக ஐ.என்.டி.யு.சி., மாநில நிர்வாகிகள் தேர்தலை, ஐ.என்.டி.யு.சி., சட்ட விதிகள்படி நடத்தும்படி, சென்னை உயர் நீதிமன்ற ‘டிவிசன்’ பெஞ்ச் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழக ஐ.என்.டி.யு.சி., சட்ட விதிகள்படி, அவசர செயற்குழு கூட்டம், கடந்த அக்.31ல் நடந்தது. அதில், செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கத்தில், வரும் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, மதுரை வ.உ.சி., மண்டபத்தில், மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்கும் என, தற்கால குழு தலைவர் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், போட்டி தேர்தல் தேதி நடக்கும் என, கடந்த 3ம் தேதி வெளியிட்ட அறிவிப்பு சட்ட விரோதமானது என்பதால், அதற்கு இடைக்கால தடை விதிக்க கோரி, திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், நேதாஜி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
ஐ.என்.டி.யு.சி., தமிழக சட்ட விதிகளின் 11வது பிரிவின்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் நடைமுறைகளை பாதிக்கும் வகையில் உள்ளது என்பது, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்கள் வாயிலாக தெரிகிறது. வழக்கில் முகாந்திரம் உள்ளது. எனவே, மதுரையில் சட்ட விதிகளுக்கு எதிராக, வரும் 15ம் தேதி தேர்தல் நடக்கும் என, கடந்த 3ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தவும், வரும் 27ம் தேதி வரை போட்டி தேர்தலுக்கும் இடைக்கால தடையும் விதிக்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, வரும் 16ம் தேதி மேடவாக்கத்தில் நடக்கும் தேர்தலுக்கு அனுமதி அளித்தும், தேர்தல் அதிகாரிகள் கல்யாணராமன் உள்பட நான்கு பேர், தேர்தலை நடத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version