பாஜக வழக்கறிஞரான மயிலாடுதுறை கே. ராஜேந்திரன்
பாஜக வழக்கறிஞரான மயிலாடுதுறை கே. ராஜேந்திரன்
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவெடுத்துள்ள நிலையில் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையைச் சுற்றிலும் ஏராளமான நவக்கிரக திவ்ய தேசங்களுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களின் தேவைகளுக்காகவும் மயிலாடுதுறையில் 16 கிமீ தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்கவும், மாப்படுகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பாக திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த 2021-ம் ஆண்டு திருத்திய மதிப்பீட்டின்படி ரூ. 57 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை ஒரு கிமீ தூரத்துக்கு கூட பணிகள் நடைபெறவில்லை. இதற்காக பலமுறை போராட்டங்களை நடத்தியும் எந்த பலனும் இல்லாமல் உள்ளது. எனவே மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நலன் கருதியும், மயிலாடுதுறையை சுற்றிலும் உள்ள கஞ்சனூர், திங்களூர், சூரியனார் கோயில் போன்ற முக்கிய நவக்கிரக தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்காகவும் இந்த புறவழிச்சாலை மற்றும் மாப்படுகை ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும், எனக்கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.சந்திரசேகரன், அருணகிரி ஆகியோர் ஆஜராகி இந்த திட்டம் தாமதமானதற்கான காரணங்களைக் கண்டறிந்து, துரிதப்படுத்த குழு அமைக்க வேண்டும், என வாதிட்டனர்.
மாநில அரசு ப்ளீடர் ஏ.எட்வின் பிரபாகர் ஆஜராகி இந்த திட்டம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையின் பதில்மனுவை தாக்கல் செய்தார். மேலும், அவர் இந்த திட்டப்பணிகள்ஏற்கனவே கன்னியாகுமரி – சென்னை தொழில் வழித்தட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நில ஆர்ஜிதப் பணிகள் நடைபெற்று வந்தது…. தற்பொழுது தஞ்சாவூர் நில வருவாய் அதிகாரி மூலம் நில அளவை எடுப்பு பணிகள் துரிதப்பட்டு வருகிறது என்றார். அதையடுத்து நீதிபதிகள், மயிலாடுதுறை புறவழிச்சாலை மற்றும் மாப்படுகை ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த திட்டத்துக்கு நில ஆர்ஜிதம் செய்யும்போது எனது வீடு இடிக்கப்படும் சூழல் உள்ளதால் இந்த வழக்கில் என்னையும் இடையீட்டு மனுதாரராக சேர்க்க வேண்டும் எனக் கோரி வீட்டு உரிமையாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்துள்ளது..