தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன்.மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்கீழ் அவர் அனைத்து விதங்களிலும் சரிசமாக, மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வரும் விண்ணப்பங்கள், மேல்முறையீடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்புமாறு தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனக்கும் தனது 3 மகள்களுக்கும் பழங்குடியினர் சாதி சான்று வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பத்தூர் மாவட்டம் வீரப்பள்ளியை சேர்ந்த சி.சோமசுந்தரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், நான் குரும்பர் இனத்தை சேர்ந்தவன். எனது தந்தையின் சகோதரரின் மகன்களுக்கு பழங்குடியின பிரிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பள்ளி கல்வி துறை மற்றும் இதர துறைகள் சார்பில் நேற்று நடைபெற்ற நேர்காணலிலும், சான்றிதழ் சரிபார்ப்பிலும் அவர்கள் கலந்துகொண்டனர்.
எனக்கு 40 சதவீத பார்வை குறைபாடு உள்ளது. இதையடுத்து, பழங்குடியினர் சான்றிதழ் கேட்டு திருப்பத்தூர் ஆர்டிஓவிடம் கொடுத்த விண்ணப்பம் கடந்த 2022 டிசம்பர் 21ல் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, 2023 ஜனவரி 10ம் தேதி திருப்பத்தூர் கலெக்டரிடம் மேல்முறையீடு செய்தேன். அந்த மனு நிலுவையில் இருக்கும்போது பள்ளிக்கல்வி துறையில் பட்டதாரி உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு அழைப்பு அறிவிக்கப்பட்டது.

எனக்கு பழங்குடியினர் சான்றிதழ் எனக்கு வழங்கப்பட்டால் எனக்கு பழங்குடியின பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணியிடத்தை ஒதுக்கிவைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மேலும், எனது மகள்கள் ரட்சுதா, ஷர்மிதா, டிஷிதா ஆகியோருக்கு பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்குமாறும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.இளங்கோவன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் 40 சதவீத பார்வை மாற்று திறனாளியாவார். மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டத்தின்கீழ் அவர் அனைத்து விதங்களிலும் சரிசமாக, மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அரசியலமைப்பு பிரிவு 41ல் மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் உறுதி செய்துள்ளது.

இதுபோன்ற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் மற்றும் குறைகள், மேல்முறையீடு தொடர்பாக தரும் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.
மனுதாரரின் மனு நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதை புரிந்துகொள்ள முடியவில்லை. கடந்த 2023ல் மனுதாரர் கொடுத்த விண்ணப்பத்தை திருப்பத்தூர் கலெக்டர் ஒரு மாதத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டால் அவர் வேலை வாய்ப்பு தொடர்பாக உரிய மனுதாக்கல் செய்து நிவாரணம் பெறலாம்.

மாற்றுத்திறனாளிகள் கொடுக்கும் விண்ணப்பங்கள், மேல் முறையீடுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துவைக்குமாறு அனைத்து துறைகளுக்கும் தமிழக தலைமை செயலாளர் சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version