கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் தூண் போல் நின்று கொண்டிருந்ததாகவும், இது துரதிஷ்டவசமானது எனவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.Rsmj bench AMJ

அரசு உதவி பெறும் கல்லூரியில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதியம் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை 50 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியான ஜி பி ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் நியமிக்கப்பட்ட 12 ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஊதியத்தை வழங்கும் படி உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உயர் கல்வித் துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குனர், கல்லூரி கல்வி கோவை மண்டல இணை இயக்குனர் ஆகியோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு, 1987 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட 11 ஊழியர்களுக்கு அதிகமாக நியமனம் மேற்கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கல்லூரி கல்வி இயக்குனர் சி பூர்ண சந்திரனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே போல விசாலாட்சி மகளிர் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர் பணியிடங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படியும் அரசு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த உத்தரவின் படி நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த கல்லூரி கல்வி இயக்குனர் பூரண சந்திரன் நீதிமன்றம் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் தூண் போல் நின்று கொண்டிருந்ததாகவும், இது துரதிஷ்டவசமானது எனவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர் பணியிடங்கள் குறித்த ஆவணங்கள் இல்லை என தெரிவித்ததன் மூலம், நீதிமன்றத்தில் உண்மை வெளிவரவிடாமல் கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகள் தடுத்து விட்டதாக குற்றம் சாட்டிய நீதிபதிகள், தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு வழக்கை 50 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த அபராத தொகையில் இருந்து 12 ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க வேண்டும் எனவும், மீதமுள்ள 32 லட்சம் ரூபாயை, cancare foundation, நேத்ரோதயா ஆகிய அமைப்புகளுக்கு தலா 16 லட்சம் ரூபாய்க்கு வீதம் எட்டு வாரங்களில் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மை, பிடிவாதம் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அபராத தொகையில் 25 லட்சம் ரூபாயை கல்லூரி கல்வி இயக்குனர் பூரண சந்திரனிடம் வசூலிக்க வேண்டும் எனவும் மீதமுள்ள 25 லட்சம் ரூபாயை ஆவணங்கள் காணாமல் போனதற்கு காரணமான அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் 12 ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு எட்டு வாரங்களில் ஊதியம் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், கல்லூரி கல்வி இயக்குனரகத்தில் உள்ள ஆவணங்கள் மாயமானதற்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

You may also like...

CALL ME
Exit mobile version