இன்று வழக்கு விசாரணை அனைத்தும் ரத்து

சென்னை, மே.7-
சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக இருப்பவர் ஜே சத்ய நாராயண பிரசாத். இவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்
மாரடைப்பினால் இறந்து விட்டதாக அறிவித்தனர். உடனே அவரது உடலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதி குடியிருப்புக்கு கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள், உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. மரணம் அடைந்த நீதிபதி சென்னை ஐகோர்ட்டில் 42 வது நீதிபதியாக உள்ளார்.
இவரது தந்தை ஜெய்பிரசாத் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அரக்கோணம் அடுத்துள்ள மின்னல் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். நீதிபதி சத்யநாராயண பிரசாத் 1969-ம் ஆண்டு மார்ச் 15-ந்தேதி தஞ்சாவூரில் பிறந்தார். வேலூரில் பள்ளி படிப்பை முடித்தவர். சென்னை லயோலா கல்லூரியில் பி ஏ வரலாறு முடித்தார். பின்னர் டெல்லியில் உள்ள கல்லூரியில் எம் ஏ வரலாறு அதன் பின்னர் சட்டப் படிப்பை முடித்து, 1997-ம் ஆண்டு பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்தார். ஏ.இளங்கோ என்ற மூத்த வக்கீலிடம் ஜூனியர் ஆக பணியாற்றினார். பின்பு தனியாக வக்கீல் தொழில் செய்து வந்தார். 2021-ம் ஆண்டு ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்ற இவருக்கு திருமணம் ஆகவில்லை.
பதவியில் உள்ள நீதிபதி இறந்துவிட்டால் ஹை கோர்ட்டில் வழக்குகள் விசாரிப்பதில்லை என்ற மரபு கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று கோடைகால ஐகோர்ட்டி ல் வழக்குகள் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டிருந்தது. நீதிபதி ஜெ சத்யநாராயண பிரசாத் இறந்து விட்டதால் இன்று வழக்கு விசாரணை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

You may also like...

CALL ME
Exit mobile version