அருள் ஜெயராஜ் S MSW., LL.B வழக்கறிஞர்

கிறிஸ்தவமும் இந்திய சட்டங்களும்
இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் வரலாறு:
இந்தியாவுக்கு கிறிஸ்தவம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது என்பதுதான் உண்மை அதாவது இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவரான புனித தோமையர் கி.பி. 52-ல் இந்தியா வந்து, கேரள மற்றும் தமிழகப் பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார். இறுதியாக இவர் சென்னையில் தோமையார் மலை என அழைக்கப்படும் பரங்கிமலையில் இயேசு கிறிஸ்துவுக்காக உயிர்த்தியாகம் செய்தார். ஆகவே இந்தியாவில் கிறிஸ்தவர்கள் சுமார் 2000 ஆண்டுகளாக கிறிஸ்தவ சமயத்தை பின்பற்றி வருகின்றார்கள். ஆகவே கிறிஸ்தவம் உலகம் முழுவதும் பரவிய அதே காலகட்டத்திலையே இந்தியா வந்தது என்பதும் வரலாறு.
இதனை சற்று விரிவாக பார்த்தோமானால் கிறிஸ்தவ சமயத்தின் தோற்றுவிப்பாளர் இயேசு கிறிஸ்து பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லகேம் நகரத்தில் கி.மு 25.12.0001 ஆம் ஆண்டு புனித யோசேப்பு மற்றும் அன்னை மரியா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இயேசு என்பதின் பெயர் விடுதலையாக்குபவர் என்று பொருள். இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறந்து நசரேத்தில் வளர்ந்து தனக்காக 12 திருத்தூதர்களை தேர்வுசெய்து சுமார் 200 கி.மி மட்டும் பயணம் செய்து கிபி 33ம் ஆண்டில் உலக பாவங்களுக்காக சிலுவையில் மரணம் அடைந்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்பது வரலாறு.
அவ்வாரு இயேசு கிறிஸ்து தேர்ந்தெடுத்த 12 திருத்தூதர்களில் ஒருவர் மிகவும் முக்கியமானவர் புனித தோமையார் கி.பி. 52-ல் இந்தியா வந்து, கேரள மற்றும் தமிழகப் பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பியவர். இறுதியாக இவர் சென்னை பரங்கிமலையில் (தோமையார் மலை) உயிர்த்தியாகம் செய்தார். அவ்வாறு பார்க்கும் போது இன்றைய இந்திய கிறிஸ்தவர்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் இந்திய மண்ணில் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இயேசு கிறிஸ்துவை பற்றி குறிப்பிடும்போது சொல்வார்கள் இவர் 200 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யாதவர். தன்னைப் பற்றி எந்த நூலையும் எழுதாதவர் மற்றும் தான் பிறந்த 33 ஆண்டுகளிலேயே இறந்தவர் அப்படி இருக்க இவர் உலக வரலாற்றையே கிறிஸ்துவுக்கு முன் (கி.மு) மற்றும் கிறிஸ்துவுக்கு பின் (கி.பி) என பிரித்து மேற்படி இன்று வரை உலகின் அதிக அளவில் பின்பற்றப்படும் சமயமாக கிறிஸ்துவ சமயம் இருந்து வருகிறது. சுருக்கமாக இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் இறப்பும் உயிர்ப்பும் மனித குலத்திற்கு வைரம்பாய்ந்த மரம் போல் பல நன்மைகளை காலம் கடந்தும் இன்றுவரை நின்று செய்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
நாம் இன்று இயேசு கிறிஸ்து பற்றி அறிந்து கொள்வது முக்கியமாக Bible (பைபிள்) மூலமாகத்தான். Bible (பைபிள்) என்பது கிறிஸ்தவர்களின் புனித நூல். இது சுமார் 1,500 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில் பல்வேறு எழுத்தாளர்களால் எபிரெயு (Hebrew), அராமைக் (Aramaic) மற்றும் கிரேக்க (Greek) மொழிகளில் எழுதப்பட்டது. இந்த நூல் படைப்பின் தொடக்கம் முதல் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, அவருடைய போதனைகள், சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் திருச்சபையின் ஆரம்பம் வரையிலான நிகழ்வுகளை விவரிக்கிறது. விவிலியம் என்பது ஒரே ஒரு நூல் அல்ல அது பல நூல்களின் தொகுப்பாகும். இதில் மொத்தம் 66 புத்தகங்கள் உள்ளன. அவற்றில் 39 புத்தகங்கள் பழைய ஏற்பாட்டையும், 27 புத்தகங்கள் புதிய ஏற்பாட்டையும் சேர்ந்தவை. மொத்தமாக, பைபிளில் 31,102 வசனங்கள் இடம்பெற்றுள்ளன. பழைய ஏற்பாடு பெரும்பாலும் கி.மு. 1200 முதல் கி.மு. 450 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு கி.பி. 1ஆம் மற்றும் 2ஆம் நூற்றாண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களால் எழுதப்பட்டது.
கிறிஸ்தவர்களின் புனித நூலாகக் கருதப்படும் பைபிளின் அர்த்தத்தைச் சிறிது ஆராய்ந்தால், விவிலியம் (Bible) என்ற சொல்லின் மூலச்சொல் கிரேக்க மொழியில் உள்ள பிப்லியன் (Biblion) என்பதாகும். 6ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் (Medieval period) காலகட்டத்தில் ஆங்கிலத்தில் பைபிள் (Bible) என்ற ஒருமைச் சொல்லாக நிலைபெற்றது. இதன் மற்றொரு பொருள் The Book (a collection of sacred writings) என்பதாகும். இன்றளவும் உலகில் The Book என்றால் அது பைபிள் (Bible) என பொருள்படும் என்பது சிறப்பானது.
மேலும் பிப்ளோசு (Biblos) என்பது இன்றைய இலெபனான் நாட்டிலுள்ள ஒரு துறைமுகப்பட்டினம். புத்தகம் எழுதப் பயன்படும் பப்பைரசு (Papyrus) என்னும் ஒரு வகை நாணல் புல் அங்கு விற்கப்பட்டது. பின்னீடு பப்பைரசு (Papyrus) என்ற கிரேக்க-இலத்தீன் சொல்லிலிருந்து paper என்னும் ஆங்கிலச் சொல் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவமும் இந்திய சட்டங்களும் என்ற தலைப்பை ஆராய்வதற்கு முன், கிறிஸ்தவமும் உலக சட்டங்களும் என்ற தலைப்பைப் பற்றி சில அம்சங்களை முதலில் பார்க்கலாம். உலகத்தில் உருவான சட்டங்களின் நெறிமுறைகள் மற்றும் நீதிக் கோட்பாடுகளில் பைபிளின் (Bible) தாக்கம் காணப்படுவது உண்மையாகும். உதாரணமாக, பத்து கட்டளைகளில் காணப்படும் கொலை செய்யக்கூடாது, திருடக்கூடாது போன்ற நெறிமுறைகள் பின்னர் பல நாடுகளின் குற்றச்சட்டங்களில் (Criminal Law) ஒத்த கருத்துகளாக இடம் பெற்றுள்ளன. அதேபோல், நீதிமன்றங்களில் சாட்சி அளிக்கும் போது உண்மையைப் பேச வேண்டும் என்ற சத்தியப்பிரமாணம் (Oath) நடைமுறையும் கிறிஸ்தவ மரபின் தாக்கத்தால் வலுவடைந்தது. மேலும், ஒரே கணவர்/மனைவி என்ற திருமணக் கருத்தும் (Marriage Laws), கருணை, நீதி, சமத்துவம் (Principles of Law Compassion, Justice, Equality) போன்ற மதிப்புகளும் பல சட்டக் கோட்பாடுகளில் பிரதிபலித்துள்ளன.
1773 முதல் 1947 வரையிலான காலகட்டத்தில் பிரிட்டிஷ் மற்றும் பிற ஐரோப்பிய கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் இயற்றிய சட்டங்களை பற்றியும் பார்ப்போம். கிறிஸ்தவ பெரும்பான்மை கொண்ட ஆங்கிலேயர்களும் மற்றும் மற்ற ஐரோப்பிய பேரரசுகளும் 15ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி சுமார் கி.பி.1500–1950 வரை, உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களை தங்களது காலனித்துவ ஆட்சிக்குள் கொண்டு வந்திருந்தனர் என்பது வரலாறு. குறிப்பாக, பிரிட்டிஷ் பேரரசு 18ஆம் மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் உலக நிலப்பரப்பின் சுமார் 25% பகுதியை ஆட்சி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவமும் இந்திய சட்டங்களும் என்ற தலைப்பின் கீழ் ஆராய்ந்தால், இந்தியா சுதந்திரம் பெறும் முன், குறிப்பாக 1773 முதல் 1947 வரை உள்ள காலகட்டத்தில், பிரிட்டிஷ் மற்றும் பிற ஐரோப்பிய ஆட்சியாளர்கள் இந்திய சட்ட துறைக்கு 500-க்கும் மேற்பட்ட சட்டங்களை இயற்றி முக்கிய பங்களிப்பு செய்துள்ளனர் என்றால் அது உண்மை. அந்த 500-க்கும் மேற்பட்ட சட்டங்கள் இன்றளவும் இந்திய சட்ட அமைப்பின் மூலக் களமாகப் பயன்பட்டு, சுதந்திர இந்தியாவில் புதிய சட்டங்களை உருவாக்க வழிகாட்டுகின்றன. ஆகவே, இந்திய சட்ட வரலாற்றில் பிரிட்டிஷ் மற்றும் பிற ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றால் அது மிகையாகாது.
அதோடு மட்டும் அல்லாது நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது 1773 முதல் 1947 காலகட்டத்தில் இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் மற்றும் மற்ற ஐரோப்பிய ஆட்சியாளர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், அவர்கள் இயற்றிய சட்டங்கள் கிறிஸ்தவ சட்டங்கள் அல்ல. அவை அதிகாரப்பூர்வ காலனித்துவ சட்டங்களாகும். இச்சட்டங்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் நிர்வாகம், ஆட்சி மற்றும் கட்டுப்பாட்டிற்காக உருவாக்கப்பட்டவை.
உதாரணமாக இந்திய தண்டனை சட்டம் (Indian Penal Code – IPC) 1860-ல், தாமஸ் பேபிங்டன் மெக்காலி (Thomas Babington Macaulay) அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டது. இந்திய சாட்சியச் சட்டம் (Indian Evidence Act) 1872-ல் சர் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜேம்ஸ் ஸ்டீபன் (Sir James Fitzjames Stephen) அவர்களால் வடிவமைக்கப்பட்டது. சொத்து மாற்றச் சட்டம் (Transfer of Property Act) 1882-ல் சர் ஹென்றி மெய்ன் (Sir Henry Maine) உள்ளிட்ட சட்ட நிபுணர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது. இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act) 1872 மற்றும் பல சட்டங்கள்.
இச்சட்டங்கள் அனைத்தும் தர்க்கம் (logic), சட்டக் கோட்பாடுகள் (legal principles) மற்றும் ஒப்பீட்டு சட்ட ஆய்வு (comparative law) ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது. மேலும் இதனைப் பற்றி அடுத்த கட்டுரையில் அறிந்துகொள்வோம்.

திரு. அருள் ஜெயராஜ் S MSW., LL.B
வழக்கறிஞர்
PRO – சிவகங்கை RC மறைமாவட்டம்
கைப்பேசி :
மின்னஞ்சல்:

——————————————————————————————————————-—

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version