Smsj bench கண்மாயில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை 2 மாதங்களில் அகற்ற வேண்டும்
மதுரை மானகிரி கண்மாயில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை 2 மாதங்களில் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள மானகிரி கண்மாயில் வக்பு வாரியத்திற்கு கல்லூரி கட்டுவதற்காக கடந்த 1969ம் ஆண்டு தமிழக அரசு 28 ஏக்கர் நிலத்தை வழங்கியது.
பின்னர் இந்த நிலத்தை அதிகாரிகள் அளந்து பார்த்தபோது 20 ஏக்கர் 143 சதுர அடி நிலத்தில் 8 ஏக்கர் வரை ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து 20 ஏக்கர் 143 சதுர அடி இடத்தை வக்பு வாரியத்திற்கு வகை மாற்றம் செய்து தமிழக அரசு வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றியது.
இதை எதிர்த்து ஹசீனா, கனகமணி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 1995ல் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி,
நீர்நிலைகள், மானகிரி கண்மாய் புறம்போக்கு நிலத்தை மனுதாரர்கள் ஆக்கிரமித்திருப்பது தெரிய வந்ததால் அவர்களை அப்பகுதியில் இருந்து அகற்ற உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த மேல் முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில், மானகிரி கண்மாய் புறம்போக்கில் பலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், வக்பு வாரியம் நடத்தும் கல்லூரியும், சட்ட கல்லூரியும் செயல்பட்டு வருவதால் தங்களுக்கு அந்த இடத்தில் பட்டா வழங்க வேண்டும் என்று வாதம் வைக்கப்பட்டது.
அரசு தரப்பில், நீர் நிலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஆக்கிரமிப்பாளர்களே ஒத்துக்கொண்டுள்ளனர்.அவர்களுக்கு மதுரை கிழக்கு வட்டம் ராஜாகூர் வீட்டு வசதி திட்டத்திலும், கருத்தம்புளியம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டு வசதி திட்டத்திலும் வீடுகள் காலியாக உள்ளன. இதில் மனுதாரர்களுக்கு வீடு ஒதுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீர்நிலைகளை பாதுகாப்பது மிக முக்கியமாகும். இல்லையென்றால் மழை காலத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்படும். எனவே, மானகிரி கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் அரசுக்கு உத்தரவிட்டனர்
அதே வேளையில் வீட்டு வசதி வாரியம் கட்டியுள்ள வீடுகளை மனுதாரர்களில் தகுதிவாய்ந்தவர்களுக்குமாற்று இடமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.