Navj எச்சரிக்கை

கம்போடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாலிபரை மீட்கக் கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யாத மத்திய வெளியுறவுத் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், வெளியுறவுத் துறை செயலாளரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோபி என்பவர், கம்போடியா நாட்டில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சட்ட உதவிகளை வழங்கி, இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி, அவரது தாய் லதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க, மத்திய அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

ஏற்கனவே மூன்று முறை அவகாசம் வழங்கியும், விளக்கமளிக்காததற்கு மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிபதி அல்லது அமைச்சரின் மகன் இதுபோல சிக்கியிருந்தால் இப்படி செயல்படுவீர்களா? என கேள்வி எழுப்பினார்.

மகனுக்கு என்ன ஆனது என தெரியாமல், சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் பரிதவிக்கும் தாயை நினைத்து பார்க்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி, ஒவ்வொரு குடிமகனும் முக்கியமானவர். பிரதமராக இருந்தாலும் சரி, சாதாரண குடிமகனாக இருந்தாலும் சரி எனக் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தை தீவிரமாக கருதி, ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் உரிய விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும் என வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, இல்லாவிட்டால், வெளியுறவுத் துறை செயலாளரை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரித்து, விசாரணையை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version