Mhc order

மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழ் மூலம் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்தில் மூன்று பேர் உரிமை கோருவதாக கூறி, பிரபல தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மறைந்த நடிகை ஸ்ரீதேவி, 1988 ஆம் ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 37 ஆண்டுகளாக சொத்தை அனுபவித்து வரும் நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரன் முதலியாரின் இரண்டாவது மனைவி, மகன் மற்றும் மகள் என மூன்று பேர், மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளது என கூறி வருவதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

சொத்தின் உரிமையாளர் மயிலாப்பூரில் வசித்து வந்த நிலையில், அவரது வாரிசுகள் எனக் கூறி மூன்று பேரும் தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் 2005 ஆம் ஆண்டு வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளனர். முதல் மனைவி உயிரோடு இருந்த போது சந்திரசேகரன் தன்னை திருமணம் செய்து கொண்டதாக இரண்டாவது மனைவி கூறியுள்ளார். இதனால் மூவரையும் சட்டபூர்வ வாரிசுகளாக கூற முடியாது என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூவரும் மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழை ரத்து செய்ய கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், தாம்பரம் தாசில்தார் ஆகியோருக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என போனி கபூர் தன் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, போனி கபூரின் விண்ணப்பத்தின் மீது விசாரணை முடிக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, போனி கபூரின் விண்ணப்பத்தின் மீது நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தாம்பரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version