Madras high court orders january 14
[1/13, 12:30] Sekarreporter 1: தெருநாய்களை சுட்டுத்தள்ள பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் எறையூரை சேர்ந்த பாபு என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில், எறையூர் பஞ்சாயத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களை சுட்டுத்தள்ளுவதற்காக பஞ்சாயத்து தலைவர் குளஞ்சி, துணை தலைவர் சின்னதுரை, கவுன்சிலர் ஜெயராமன் ஆகியோர் சேர்ந்து விஜயக்குமார் என்ற நரிக்குறவரை நியமித்ததாக குறிப்பிட்டுள்ளார். நாயை குறிவைக்காமல் கண்மூடித்தனமாக சுட்டுக்கொண்டிருந்த போது, வீட்டு வேலை செய்து கொண்டிருந்த தனது தாய் விஜயாவின் காலில் குண்டு பாய்ந்ததாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய மூன்று நாட்களில் இறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது குண்டு பாய்ந்ததை மூவரும் தெரிவிக்காமல், வெறும் காயத்திற்கு மட்டும் சிகிச்சை கொடுக்க சொன்னதாகவும், பிரேதப் பரிசோதனையின்போதே காலில் இருந்த நாட்டு குண்டு எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிதளவு நச்சுத்தன்மை உடைய குண்டுதான் தாயின் மரணத்திற்கு காரணமானதால், மூவருக்கும் எதிராக மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், பின்னர் வழக்கு பதிவு செய்த நிலையில் இழப்பீடு வழங்குவதாக கூறிய நிலையில், பின்னர் ஏமாற்றி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாய் பிடிக்கும்போது அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், விஜயா உயிரிழந்ததற்கு நாய்களை சுட்டவிரோதமாக சுட்டுப்பிடித்ததே காரணம் என்பதற்கான முகாந்திரம் இருப்பதாகவும், தெருவில் திரியும் நாய்களை சுட்டுத்தள்ள உத்தரவிட்டதே சட்ட விரோதம் என குறிப்பிட்டுள்ளார். எனவே விஜயா மரானத்திற்கு காரணமான மூவரும் சேர்ந்த 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்படவில்லை என்பதால் தமிழக அரசும் 5 லட்ச ரூபாய் செலவில் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். மொத்த இழப்பீடான 10 லட்ச ரூபாயை விஜயாவின் வாரிசுகளுக்கு எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
[1/13, 14:26] Sekarreporter 1: கட்டிட அனுமதியை மீறி கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும், பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவர் மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜோசப் ரெட்டியார் காலனியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்த 15 அடி அகலமுள்ள பொதுப் பாதையில் ஜெரோம் ஸ்டான்லி மற்றும் ரீட்டா மேரி ஆகியோர் ஐந்தடி வரை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பலமுறை ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்ததாகவும், அதில் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனவும், ஆக்கிரமிப்பை அகற்றும் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நகராட்சி ஆணையர் தரப்பில் பொதுப்பாதையில் கட்டுமானம் மேற்கொள்வது தொடர்பான புகாரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டவுடன், கட்டுமான பணிகள் மேற்கொண்டு நடைபெறாமல் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கட்டிட அனுமதியை மீறி கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்றும், பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு மருத்துவர் மணிகண்டன் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்தனர்.
[1/13, 14:59] Sekarreporter 1: சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை நிறைவேற்றாதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை என அய்யம்பெருமாள் என்பவர் 2019ல் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், 2016 சட்டமன்ற தேர்தலின் போது, சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், பாதாள சாக்கடை அமைப்பதாக வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் அமல்படுத்தவில்லை எனவும், அருகில் உள்ள புழுதிவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ள செப்டிக் டேங்குகள் நிரம்பி சாலைகளில் வடிவதால் நோய் தொற்று அபாயம் இருப்பதாகவும்,
பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக அனுப்பிய மனு மீதி சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கில், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் தரப்பில், மடிப்பாக்கம் பகுதிக்கு 160 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் பாதாள சாக்கடை அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும், திட்ட அறிக்கை கிடைத்தவுடன், நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டது. டெண்டர் பணிகளை முடிக்க 6 மாதமும், அதன்பின்னர் 36 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை 2020ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி பணிகள் முடிக்கப்படவில்லை என கடந்த ஆண்டு அய்யம்பெருமாள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மடிப்பாக்கம் தொடர்பான வழக்கில் அந்த பகுதியை தவிர மற்ற பகுதிகள் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், ஆனால் நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் மடிப்பாக்கத்தில் பணிகள் ஏதும் துவங்கப்படாதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். பணிகளை முடிக்க கூடுதல் கால அவகாசம் கூட கேட்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.
எனவே நீதிமன்ற உத்தரவை அவமதித்தது உறுதியாவதாக தெரிவித்த நீதிபதிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்,சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய நிர்வாக இயக்குனர் மற்றும் செயற் பொறியாளர் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 28ஆம் தேதி தள்ளிவைத்தனர்.
[1/13, 15:56] Sekarreporter 1: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய வடமலைபாளையம் கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிபந்தனைகளுடன் பரிசீலிக்க மாவட்ட காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜனவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஈரோடு மாவட்டம், பெரியவடமலைபாளையம், ஜம்பை கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கும்படி, பவானி டி.எஸ்.பி.க்கும், காவல் ஆய்வாளருக்கும் உத்தரவிடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம் மற்றும் வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், அந்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளித்து தமிழக அரசு ஜனவரி 10ம் தேதி உத்தரவிட்டுள்ளதாகவும், சேவலுக்கு காயம் ஏற்படாத வகையில் போட்டி நடத்தலாம், சேவல்களின் கால்களில் கத்தி கட்டக் கூடாது, சேவல்களுக்கு மதுபானம் கொடுக்க கூடாது, கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த அனுமதியளித்து உயர் நீதிமன்றம் கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் உத்தரவிட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தற்போது சேவல் சண்டை நடத்த அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என பவானி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
[1/13, 16:08] Sekarreporter 1: கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக எருது ஆட்டம் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி அளிக்கும் விண்ணப்பத்தை சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்க வேண்டும் என சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.ஆர்.வரதராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் எருது ஆட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு எருதாட்டம் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என கிராமத்தினரை அன்னதானப்பட்டி காவல் நிலையத்தினர் எச்சரிப்பதாகவும், மீறி நடத்தினால் திரும்ப குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படும் என மிரட்டுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் கலாச்சார நிகழ்ச்சிகளால் தொடர்பாக எவ்விதமான புகாரோ, விரும்பத்தகாத சம்பவங்களோ ஏற்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கோவில் திருவிழாவில் எருதாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதை தடுக்கக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே. கல்யாணசுந்தரம் மற்றும் வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் கோயில்களை திறப்பதற்கும் விழாக்கள் நடத்துவதற்கும் தமிழ்நாடு அரசு விதித்துள்ள தடையை சுட்டிக்காட்டி, கோவில்களை திறக்க அனுமதிக்கப்படும் மற்றொரு நாளில் விழாவை நடத்துவதற்கு அனுமதி கோரி புதிய மனுவை காவல்துறையிடம் வேண்டும் என்று மனுதாரருக்கும், அதை சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.