Judges sathis kumar and Baratha chakraverthy / forest order
கோவை ஆனைகட்டியில் இயங்கி வரும் ரிசார்ட்டுகள் உரிமம் பெற்று இயங்குகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
யானைகள் வழித்தடமான ஆனைகட்டியில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை மூட உத்தரவிட வேண்டும் எனவும், கோவை – ஆனைகட்டி இடையிலான மாநில நெடுஞ்சாலையில் இரவு நேரம் போக்குவரத்தை நிறுத்த உத்தரவிட வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார்.
தரப்பில், மசினகுடியில் இயங்கி வந்த சட்டவிரோத ரிசார்ட்டுகள் மூடப்பட்டதை தொடர்ந்து அனைகட்டி பகுதியில் ரிசார்ட்டுகள் சட்டவிரோதமாக துவங்கப்படுகின்றன என தெரிவித்தார்.
அதற்கு வனத்துறை தரப்பில் சிறப்பு பிளிடர் சீனிவாசன் ஆஜராகி, அனைகட்டியில் வனத்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எந்த ரிசார்டுகளும் இல்லை என விளக்கமளித்தார்.
இதையடுத்து மனுதாரர் குறிப்பிடும் ரிசார்ட்டுகள், உரிமம் பெற்று இயங்குகிறதா என்பதை ஆய்வு செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த குழு சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மேலும் கோவை – ஆனைகட்டி இடையிலான மாநில நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்த வேகத்தடைகள் எற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 28 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.