Judge tickaraman quash the order
நெற்பயிர் மீது டிராக்டர் ஏற்றி நாசம் செய்ததை வேடிக்கை பார்த்ததுடன், மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆரணி டி.எஸ்.பி.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்துள்ள காமக்கூர் கிராமத்தை சேர்ந்த சாமுண்டீஸ்வரி மற்றும் சாவித்திரி ஆகியோர் குடும்பங்களுக்கு இடையே விவசாயம் நிலம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது.
இருதரப்பினரும் அளித்த புகார்கள் குறித்து விசாரிக்கும்படி, வேலூர் டி,ஐ.ஜி., உத்தரவிட்டதால், ஆரணி டி.எஸ்.பி. ஜெரினா பேகம், கடந்த 2017ம் ஆண்டு காமக்கூர் கிராமத்துக்கு நேரடியாக சென்றார். அப்போது, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மீது சாமுண்டீஸ்வரி தரப்பினர் டிராக்டரை ஓட்டி அழித்ததாகவும், இதை டி.எஸ்.பி. வேடிக்கை பார்த்ததாகவும் சாவித்திரியின் கணவர் கிருஷ்ணன், டி.எஸ்.பி. ஜெரினா பேகத்துக்கு எதிராக திருவண்ணாமலையில் உள்ள மனித உரிமை மீறல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, ஜெரினா பேகத்துக்கு சம்மன் அனுப்பி கடந்த 2018ம் ஆண்டு ஜனவரியில் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஜெரினா பேகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்து, நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்த உத்தரவில், குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் படி, மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பின், சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றாமல் நேரடியாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அரசின் முன்அனுமதியைப் பெறாமல் டி.எஸ்.பி. மீது தொடப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் கூறி, டி.எஸ்.பி. ஜெரினா பேகத்துக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், விவசாய நிலம் தொடர்பாக சாமுண்டீஸ்வரி தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மறைத்து சாவித்திரி தரப்பினர் போலீசில் புகார் செய்துள்ளதாகவும், இந்த விவரங்கள் தெரியாமல் சம்பவ இடத்துக்குச் சென்ற போது, கிருஷ்ணன் தரப்பினர் திட்டமிட்டு நடத்திய அரங்கேற்றிய நாடகத்தில் டி.எஸ்.பி. சிக்கிக் கொண்டதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.