Case against minister quashed
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனுமதியின்றி போராடத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விருதுநகரில் போராட்டம் நடைபெற்றது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி போரட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஐந்து ஆண்டுகள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனக்கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனிடையே, பால்வளத்துறையின் அப்போதைய அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை கண்டித்து கொரோனா பெருந்தொற்று காலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி போரட்டத்தில் ஈடுபட்டதாக விருதுநகர் திமுக எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர். சீனிவாசனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் ரத்து செய்து நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டார்.