யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு குறித்து அவரது தாயார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூ டியூபர் சவுக்கு சங்கருக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு குறித்து அவரது தாயார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸார் பதிவு செய்த மோசடி வழக்குகளின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
மருத்துவ காரணங்களுக்காக அவரை ஜாமீனில் விடுவிக்கக்கோரி அவரது தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கை விசாரி்த்த சென்னை உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு மார்ச் 25-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ஜாமீன் வழங்கப்பட்ட போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சவுக்கு சங்கர் மீறியுள்ளதால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..
மேலும், சவுக்கு சங்கருக்கு உடல் நிலை கோளாறு எதுவும் ஏற்பட்டால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அவரது உடல் நிலையை கண்காணிக்க மருத்துவக்குழுவை ஏற்படுத்த தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், சாட்சிகளை மிரட்டி சவுக்கு சங்கர் தொடர்ந்து யூ டியூப்பில் பேசி வருவதாக கூறினார்.
இதனையடுத்து, மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்று இப்படி செய்யலாமா? என சவுக்கு சங்கருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சேகரித்து வைக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தினர்.
மேலும், மனு குறித்து சவுக்கு சங்கரின் தாயார் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.