பதிவாளரின் தற்காலிக பணி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை

திருப்பத்துார் மாவட்ட பதிவாளரின் தற்காலிக பணி நீக்க உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், சமீபத்தில் பதிவுத்துறையில் திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்ட பதிவாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், தன் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பத்துார் மாவட்ட பதிவாளர் செந்துார் பாண்டியன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவு:
‘சஸ்பெண்ட்’ உத்தரவு விவகாரங்களில், இந்நீதிமன்றம் தலையிடுவதில்லை. இருப்பினும், நேற்று முன் தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘சஸ்பெண்ட்’ செய்ததற்கான எவ்விதக் காரணமும் தெரிவிக்கப்படாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள் நோக்கத்துடன் செயல்பட்டதாகக் கூறி, அவர்கள் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
‘சஸ்பெண்ட்’ தொடர்ந்த கோப்புகளை சமர்ப்பிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை ஆய்வு செய்ததில், மொத்த பக்கங்களில் 41 மற்றும் 42 ஆகிய பக்கங்கள் இடையில் சேர்க்கப்பட்டிருப்பது தெரிகிறது.
அனைத்துப் பக்கங்களும் தட்டச்சு செய்யப்பட்ட நிலையில், திடீரென கையால் எழுதப்பட்ட குறிப்புகளை கொண்ட இரண்டு பக்கங்கள் இடையில் சேர்க்கப்பட்டிருப்பது தெரிகிறது.
அதைத் தொடர்ந்து வரும் பக்க எண்கள், ‘ஓவர்ரைட்டிங்’ மூலமாகவும், ‘ஒயிட்னர்’ பயன்படுத்தியும் மாற்றியமைக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது.
‘நோட் பைலில்’ பல்வேறு அதிகாரிகள், ஜூன்.1ல் தான் கையெழுத்திட்டு உள்ளனர்.
மனுதாரர், தற்போது சஸ்பெண்ட் செய்ய அடிப்படையாக அமைந்த அரசாணையும், அன்றைய தினமே பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது, ஆச்சரியம் அளிக்கிறது.
கோப்பில் 41 மற்றும் 42வது பக்கங்களாக ‘இணைக்கப்பட்ட’ தாள் முக்கியத்துவம் பெறுவதோடு, இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான முகாந்திரத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த மனுவுக்கு, ஜூலை 6ம் தேதிக்குள் தமிழக அரசு, பதிவுத்துறை ஐ.ஜி., பதிலளிக்க வேண்டும்.
அதுவரை சஸ்பெண்ட் உத்தரவு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version