நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் கனிம வள கொள்ளையை தடுப்பதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை
கனிம வள கொள்ளையை தடுப்பதில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை என அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கனிம வள திருட்டை தடுக்க இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனிம வள திருட்டு தொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கனிமவள துறையின் ஆணையர் மோகன் நேரில் ஆஜராகியிருந்தார்.
அவரிடம் தமிழ்நாட்டில் தொடரும் கனிம வள கொள்ளையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் அப்போது கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், கனிம வளங்களை எடுப்பதற்கு ஆன்லைன் பதிவு முறை, ஜி.பி.எஸ். மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றி வருவதாகவும், கனிவளங்களை சட்ட விரோதமாக திருடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது மட்டும் போதாது என்றும் இத்தகைய சட்ட விரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
கனிம வளங்கள் நாட்டின் கட்டமைப்பிற்கு மிக முக்கியமான சொத்து என தெரிவித்த நீதிபதிகள் அவற்றை கொள்ளையடிப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
கனிம வள கொள்ளையர்களுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது இதுவரை ஏன் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அரசு அதிகாரிகளே இவ்வாறு செயல்பட்டால் கனிம வள திருட்டை தடுக்கவே முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
கனிம வள கொள்ளை விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், ஆனால் கனிமவள கொள்ளைய தடுப்பதில் தமிழக அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என அதிருப்தி தெரிவித்தனர்.
இதனையடுத்து, உத்தரவிட்ட நீதிபதிகள், சட்டவிரோத கனிம வள கொள்ளையை தடுப்பதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து அடுத்த வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசின் கனிம வள துறை ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தனர்.