தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு, தேர்தல் பணிகளை காரணமாக கூறக்கூடாது
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு, தேர்தல் பணிகளை காரணமாக கூறக்கூடாது என அரசு அதிகாரிகள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
2007 ம் ஆண்டு துணை தாசில்தாரர் பதவி உயர்வுக்கான பட்டியலில் சேர்த்த தனது பெயரை 2006 ம் ஆண்டு பட்டியலில் சேர்க்கக் கோரி வருவாய் துறையில் பணியாற்றிய ராஜாகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 12 வாரங்களில் 2006 ம் ஆண்டு பட்டியலில் அவரது பெயரை சேர்க்கும்படியும், உரிய பண பலன்களை வழங்கும்படியும், கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, ராஜா குமார் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பித்த நிலையில், அதன் பின் ஆறு மாதங்க்ளாகியும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன் என, தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு, தேர்தல் தொடர்பான பணிகள் காரணமாக உத்தரவை அமல்படுத்த இயலவில்லை என அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறக்கூடாது என தெரிவித்தனர்.
மேலும், பணப்பலன்கள் சொற்ப தொகை தான் வரும். அதை அமல்படுத்துவதில் என்ன சிக்கல். இதுபோல நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாமல் இருந்தால், நீதிமன்ற அவமதிப்பு செய்ததற்காக தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் இரண்டு வாரங்களில் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என எச்சரித்து, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த கால அவகாசம் கேட்கலாம்; அல்லது உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். இந்த இரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாவிட்டால் உத்தரவை அமல்படுத்தியே ஆக வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளரை அறிவுறுத்தும்படி, தமிழக அரசு தலைமை வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.