தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தாக்கல் செய்துள்ள மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக காவல்நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் தாமரைக்கேணி என்ற நீர்நிலையாகும். இந்த இடத்தை மேய்க்கால் புறம்போக்காக அறிவித்து காவல்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) ஒப்புதல் பெறவில்லை. எனவே, நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள காவல்நிலையத்துக்கு தடை விதித்து நீர்நிலையை பழைய நிலைக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐஐடியின் 2 பேராசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.
அதன்படி, நியமிக்கப்பட்ட ஐஐடி பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன் மற்றும் சவுமேந்திரர் ஆகியோர் அடங்கிய குழு ஏரி பகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தது.

அறிக்கையில், செம்மஞ்சேரி காவல் நிலையம் ஏரி ஆக்கிரமிப்பு இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. காவல் நிலையத்தை மட்டும் இடித்துவிட்டால் பெரிய மாற்றம் ஏற்படாது என்ற தெரிவிக்கப்பட்டிருந்தது.
அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், சம்மந்தப்பட்ட நீர் நிலையில் எந்தெந்த ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என்பது குறித்து ஐஐடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பல இடங்கள் வருவாய் ஆவணங்களில் இல்லை.

ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. ஆனால், அதிகாரிகள் இதை கண்டுகொள்வதில்லை. நீர் நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை.
நீர் நிலைகள் மட்டுமல்லாமல் வனப்பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் தேவைதான். ஆனால், அதற்காக நீர் நிலைகளையும், வனப்பகுதிகளையும் வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் அழித்துவிடக்கூடாது.

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை தமிழக தலைமை செயலாளர் உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும்.
சென்னையில் மட்டும் 950 நீர் நிலைகள் இருந்தன. ஆனால், அவை பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறியுள்ளன. எனவே, நீர் நிலைகள், வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இது குறித்து தமிழக அரசு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

You may also like...

CALL ME
Exit mobile version