முடக்கப்பட்ட சொத்துகளைப் பத்திரப்பதிவு செய்ய முடியாது: தனி நீதிபதியின் உத்தரவையும், பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரத்தையும் ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் ராஜேஷ் விவேகானந்தன் அமர்வு அதிரடி !*

*முடக்கப்பட்ட சொத்துகளைப் பத்திரப்பதிவு செய்ய முடியாது: தனி நீதிபதியின் உத்தரவையும், பதிவு செய்யப்பட்ட விற்பனைப் பத்திரத்தையும் ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் ராஜேஷ் விவேகானந்தன் அமர்வு அதிரடி !*

*மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.*

சென்னை:
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில், தன்னுடைய விற்பனைப் பத்திரத்தைப் பதிவு செய்ய சார்பதிவாளர் மறுத்து உத்தரவிட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட சொத்து ஏற்கெனவே நீதிமன்றத்தாலும் வருமான வரித்துறையினராலும் முடக்கப்பட்டிருந்ததைக் காரணம் காட்டி பத்திரப்பதிவு செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனவே, சார்பதிவாளரின் மறுப்பு உத்தரவை ரத்து செய்து, தனது விற்பனைப் பத்திரத்தைப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி, சார்பதிவாளரின் விற்பனைப் பத்திரத்தைப் பதிவு செய்ய இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆசிக் அலி மற்றும் அஜ்ஜுர் முகமது ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கைத் தாக்கல் செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஆர். ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மேல்முறையீட்டாளர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டார்.
அப்போது, சம்பந்தப்பட்ட சொத்து ஏற்கெனவே நீதிமன்றம் மற்றும் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், பதிவு சட்டம், 1908-ன் பிரிவு 22-B-ன் கீழ் இத்தகைய ஆவணங்களைப் பதிவு செய்வதற்குச் சட்டரீதியான தடை இருப்பதாக வாதிட்டார்.
மேலும், சொத்து முடக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கான விற்பனைப் பத்திரத்தைப் பதிவு செய்ய தனி நீதிபதி உத்தரவிட்டது சட்டத்திற்கு முரணானது என்றும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீதிமன்றம் அல்லது உரிய அதிகாரியால் முடக்கப்பட்ட சொத்துகள் தொடர்பான விற்பனை ஆவணங்களைப் பதிவு செய்வதற்குச் சட்டரீதியான தடை உள்ளதாகக் குறிப்பிட்டனர்.
மேலும், சார்பதிவாளர் ஒரு ஆவணத்தைப் பதிவு செய்ய மறுத்து உத்தரவிட்டால், அந்த உத்தரவை எதிர்த்து நேரடியாக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்வதற்குப் பதிலாக, பதிவு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மேல்முறையீடு உள்ளிட்ட சட்டரீதியான தீர்வுகளையோ அல்லது உரிய உரிமையியல் நீதிமன்றத்தையோ நாட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பதிவு சட்டத்தில் மாற்றுத் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைப் பயன்படுத்தாமல் நேரடியாக ரிட் மனுத் தாக்கல் செய்து பத்திரப்பதிவு செய்ய உத்தரவு பெற முடியாது என்பதையும் இரு நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியது.
இதையடுத்து, மேல்முறையீட்டை அனுமதித்த நீதிபதிகள், விற்பனைப் பத்திரத்தைப் பதிவு செய்ய உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர்.
மேலும், தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்த விற்பனைப் பத்திரத்தையும் ரத்து செய்ய உத்தரவிட்டனர்.
முடக்கப்பட்ட சொத்துகளைப் பத்திரப்பதிவு செய்வதற்கான சட்டரீதியான தடையையும், சார்பதிவாளரின் மறுப்பு உத்தரவை எதிர்த்து பதிவு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்பதையும் இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version