Sethu Sir Dinamalar: * தேங்யூ அம்மா! * (எனது 54வது பிறந்தநாளுக்கு, அம்மாவுக்கு வழங்கும் எழுத்துப் பரிசு ) *

[2/20, 01:37] Sethu Sir Dinamalar: *
தேங்யூ அம்மா!
*
(எனது 54வது பிறந்தநாளுக்கு, அம்மாவுக்கு வழங்கும் எழுத்துப் பரிசு )
*
மனம் கோணாமல் பரிமாறும், ருசியான உணவு படைக்கும் உணவங்களை தேடி உண்பதே, மனிதனின் ஆகப்பெரிய ஆசையாக மாறிவிட்ட இந்த நாகரீக காலத்தில், அன்பையும் சேர்த்தே சமைத்து பரிமாறும் அம்மாவின் கைப்பக்குவ உணவு கிடைத்துவிட்டால், வாழ்வில் வேறென்ன வேண்டும்.

தாய்ப்பாலில் தொடங்கி, ஒரு ஸ்பூன் வெறும் பாலுடன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது.

இடைப்பட்ட பயணத்தில், மனிதனுக்கு எத்தனை எத்தனை உணவு தேடல்.

மனிதனின் 3 அங்குல நாக்கில், எட்டு தசைகள், 10,000 சுவை அரும்புகள் என்று சயின்ஸ் சொல்கிறது.

வாய்க்குள் துள்ளும் அந்த சின்னஞ்சிறிய நாக்கே, உணவின் திசை நோக்கி மனிதனை ஓட வைக்கிறது.

முன்பு சுவைத்த, சிறப்பான உணவின், நினைவு வந்தவுடனே, மனதின் கட்டளையால், மழையென உமிழ்நீர் பொழிகிறது.

மறுபடி அதே சுவை ருசிக்காதபோது, மொத்த உலகத்தின் மீதும் மனம் வெறுப்பு கொள்கிறது.

அறிவு, ஆற்றல், நினைவு, படைப்பு, உழைப்பு என்று உணவே அனைத்திற்கும் அடித்தளமாகிறது.

தேவையான நேரத்தில், சரியான உணவும், அன்பான பரிமாறுதலும் அமைந்துவிட்டால், வாழ்வே இன்பமயம்.

வெறும் உணவு பொருட்களால் வயிற்றை நிரப்பாமல், அதன் சுவையை, உணர்வை, உள்வாங்குபவர்கள் எப்போதும் மிளிர்கிறார்கள்.
*
கல்லூரி காலம் வரைக்கும் வயிறு நிரம்பினால் போதும் என்று வாழ்க்கை நகர்ந்தது.

நிருபராக பணி தொடங்கியபோது, உண்பதற்கு நேரம் கிடைத்தால்போதும் என்று இருந்தது.

கோயமுத்தூர் நாட்களில், அமிலம் பொங்கிய வயிற்றில், வெறும் டீயை ஊற்றி அணைக்க பழகி இருந்தேன்.

பாட்டி மெஸ் நாட்களில், வாழை இலையில், கொதிக்க கொதிக்க பரிமாறப்படும் சூடான சாதமும், சாம்பாரும் தேவ ருசி.

அறியாமல், வயிறை காயப்போட்டதன் விளைவு, அதற்குபின் உணவே சுமையானது.
*
ஒரு அன்பர் தனது வயது முதிர்ந்த தந்தையை முதியோர் இல்ல பராமரிப்பில் விட்டுவிட்டு, வெளிநாடு சென்றார். அவர் செல்லும்முன், போதுமான பணத்தை, முதியோர் இல்ல நிர்வாகியிடம் வழங்கி, ‘‘எனது தந்தை, எந்த பலகாரம் கேட்டாலும், மறுப்பு சொல்லாமல், சாப்பிட வாங்கி கொடுங்கள். இன்னும் பணம் வேண்டுமானாலும் அனுப்புகிறேன்’’ என்று சொல்லி சென்றார் என கேள்விப்பட்டேன்.

80 வயதிற்கு மேல்தான், சாக்லேட், ஐஸ்கிரீம், ஸ்வீட், காரம் எல்லாம் அப்பா விரும்பி கேட்ட நாட்கள் நினைவில் வருகின்றன.

இளமையில் உணவை மறந்து உழைத்தவர்கள், முதுமையிலும் அதை ஏற்க உடல் இடம் கொடுப்பதில்லை.
*
வாகன பயணத்திலும், வாழ்க்கையிலும் 40 இல் தான் நிதானம் பிறக்கிறது.

40 வயதில்தான், இசைஞானி, என் மனதில் குடி புகுந்தார்.

அதே வயதி்தான், சூடான ரவா இட்லியில் சேர்க்கப்படும் நெய்யின் காம்பினேஷன் புரிந்தது.

அடையில், அம்மா சேர்க்கும் முருங்கைக்கீரை சுவையும், தேங்காய் பால் எடுத்து செய்யும் சொதிக்கு, அம்மா தரும் இஞ்சி சட்னியின் அருமையையும் நா உணர்ந்தது.

லேசாக வறுத்து அரைத்து எடுத்த உளுந்தம் மாவை, கொதிக்கும் கருப்பட்டிச் சாறில், கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து. நல்லெண்ணை ஊற்றிக்கிளறும்போது, வீடு முழுக்க பரவுமே ஒரு பரவச வாசம்… அது மன கிளர்ச்சி தந்தது.

சூடான உளுந்த சோற்றில், கருப்பு எள் துவையல் கலந்து சாப்பிடும்போது ஒரு மகிழ்ச்சி போதை வந்தது.

கைப்பக்குவமாக உப்பு, புளி, மிளகாய், மசாலா சேர்த்து கொதிக்கவிட்டு காய்கறிகள், அரிசி எல்லாவற்றையும் ஒன்றாக கொட்டி வேகவைத்து எடுத்து, ஆவி பறக்க, பறக்க, நல்லெண்ணை ஊற்றி பரிமாறும் கூட்டாஞ்சோறு கிறங்க வைத்தது.
*
எது கேட்டாலும், சளைக்காமல், அம்மா சமைக்கும், உணவில் இருக்கும், ஊட்டச்சத்து அறிவியல் வியக்கச் செய்கிறது.

முதியோர்களின் உடல் ஆரோக்கியம், அவர்களின் சமையலறை ரகசியம்.

உப்பு, புளி, காரத்துடன், உணவில் கொஞ்சம் அன்பும் சேர்வதால்தான், வீட்டு உணவுகள் வயிற்றையும் மனதையும் கெடுப்பதில்லை.

‘‘உனக்கு பிடிக்கும்ல… இன்னும் கொஞ்சம் சாப்பிடு…’’ என்று தட்டு காலியாக, காலியாக அன்பால் நிரப்பிக் கொண்டிருக்கும் அம்மாவிற்கு என்ன கைம்மாறு செய்துவிட முடியும் .

‘‘நன்றாக இருந்தது…’’, ‘‘வயிறு நிரம்பிவிட்டது…’’ என்று குழந்தைகள் சொல்லும் ஆத்மார்த்தமான, அன்பான வார்த்தை ஒன்றே, காலமெல்லாம், அடுப்புச் சூடு பொறுத்துக்கொண்டு, சமைத்து பரிமாறும் தாய்மார்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

*
ஆண்கள் உலகம் மிக மிக அழகானது.

ஒரு பெண்மையின் தியாகத்தில் பிறக்கிறார்கள்.

சகோதரியின் அரவணைப்பில் வளர்கிறார்கள்.

மனைவியின் அரவணைப்பில் மலர்கிறார்கள்.

மகளின் பாசத்தில் மறுபடி மழலையாகிறார்கள்.

ஒரு தாய்க்குப்பின், இன்னொரு தாயாக மனைவி அமைகிறாள்.

சமையலறையில் பிறக்கும் சந்தோஷமே அன்றாட வாழ்வில் ஆனந்தத்தை மலரச் செய்கிறது.

உணவில் உப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும்… காபியில் சூடு இருந்தாலும், இல்லாவிட்டாலும்.. அதை அன்பாக தந்தவருக்கு, அவர் விரும்பாவிட்டாலும்கூட நன்றி சொல்லுங்கள்.

சொல்லாமல் விட்டுப்போன நன்றிக்கடன்களே வாழ்வில் ஆகப் பெரும் மனச் சுமையாக மாறுகிறது.

சமைப்பதும், பரிமாறுவதும், உண்பதும் வாழ்வின் வெறும் அன்றாட சடங்குகள் அல்ல.

அன்பான உறவுகளுடன் நாம் வாழ்வதற்காக, காலம் போட்டிருக்கும் ஞான கணக்குகள் என்றே தோன்றுகிறது.

அம்மாவின் ஸ்பெஷல் உணவுகளை, அவர் கையால் உண்ண ஆசைப்படும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், தரவேண்டும் என்பதே என் ஆகப்பெரும் ஆசை.

அதற்கான தெம்பை கடவுள் அவருக்கு தரட்டும். காலம் கனியட்டும்.

– அன்புடன் சேது
20.02.2021
[2/20, 06:42] Sekarreporter1: Super sir

You may also like...