Ponichery election case

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாக கூறி, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுத்ததை எதிர்த்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற்றதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த அரசாணைகள் பிறப்பிக்கும்போது, அரசியல் சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எதிர்க்கட்சி தலைவர் சிவா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், பழங்குடியினத்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதற்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், அதற்குரிய புள்ளி விவரங்கள் மத்திய அரசிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கல்வி, வேலைவாய்ப்புக்கு வழங்கிய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசியல் ஒதுக்கீடு வழங்க முடியாது என்றும், புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டு விகிதங்களை முடிவு செய்ய ஆணையம் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர்.

இதற்கு விளக்கமளித்த புதுச்சேரி அரசுத்தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண், இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசு தீர்மானமாக உள்ளதாகவும், விரைவில் ஆணையம் அமைக்க உள்ளதாகவும், தேர்தல் நடத்த நான்கு மாத அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் தான் உத்தரவிட்டுள்ளது என்பதால் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தையே நாட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஏற்றுக் கொண்டு மனுதாரர்கள் தரப்பில், வழக்குகளை திரும்பப் பெறுவதாகவும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் வரை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைத்த உத்தரவை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரினர்.

இதையடுத்து, வழக்குகளை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டனர்.

You may also like...