Nirmal kumar judge தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை

தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகர் எஸ்.வி.சேகருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் எஸ்.வி.சேகர் வெளியிட்ட வீடியோவில், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், தேசிய கொடியில் அந்த நிறத்தை கிழித்துவிட்டு சுதந்திர தின கொடி ஏற்றப்போகிறாரா என பேசியிருந்தார்.

தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி சேகருக்கு எதிராக சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர்  சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

சென்னை எம்.பி – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும் நடிகர் எஸ்.வி.சேகர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் உத்தரவிட்டார்.

பின்னர், எஸ்.வி.சேகரின் மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

You may also like...