Msnj nirmal kumar j பொதுமக்கள் சட்டத்தை தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டால் அது அராஜகத்துக்குத்தான் வழிவகுக்கும். எனவே, இதுபோன்ற சம்பவம் இனி எங்கும் நடைபெறக்கூடாது. அதனால், இந்த சம்பவம் தொடர்பாகவும், எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் வருகிற 28-ந்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.

சென்னை, 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்று முன்தினம் மரணமடைந்த டாக்டரின் உடலை கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ மயானத்தில் நல்லடக்கம் செய்யவிடாமல் ஒரு கும்பல் தடுத்தனர். உடலை கொண்டு வந்தவர்கள் மீது கல்வீசி தாக்குதலும் நடத்தினர். இதில், உடல் கொண்டு வரப்பட்ட ஆம்புலன்ஸ் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் போலீசார் உள்பட பலர் படுகாயமடைந்தனர். இதன்பின்னர், டாக்டரது உடல், அங்கு அடக்கம் செய்ய முடியாமல், வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் தாமாக முன்வந்து பொதுநல வழக்கை பதிவு செய்து விசாரணைக்கு எடுத்தனர். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

டாக்டரின் உடலை அடக்கம் செய்ய சென்றபோது ஏற்பட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினையால் அரசு ஊழியர்களும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பித்துள்ளன. அந்த கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகளின்படி இறந்தவர்களின் உடலை கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நல்லடக்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டும் வலியுறுத்தி உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.

ஆனால் இறந்த டாக்டரின் உடலை அடக்கம் செய்ய சென்றவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நல்லடக்கம் செய்யவிடாமல் தடுத்து சட்டவிரோதமாக கூடுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வழிவகை இருந்தும் போலீசார் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொதுமக்கள் சட்டத்தை தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டால் அது அராஜகத்துக்குத்தான் வழிவகுக்கும். எனவே, இதுபோன்ற சம்பவம் இனி எங்கும் நடைபெறக்கூடாது. அதனால், இந்த சம்பவம் தொடர்பாகவும், எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் வருகிற 28-ந்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

You may also like...