Madras high court orders october 26th

[10/25, 12:52] Sekarreporter: இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதுடன், குற்றவாளி போல காட்டியுள்ளதாக நடிகர் விஜய வேதனை சென்னை உயர் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்ததோடு,
நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்

அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்க கோரியும் நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, கருத்தை நீக்க வேண்டும். இடைக்கால தடை… ஒரு லட்சம் அபராதம். வரி செலுத்தப்பட்டு, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிலுவை வரித்தொகையான 32 லட்சத்த் 30 ஆயிரத்தை ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்தியாதாகவும், அது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதால், தனி நீதிபதியின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். எனவே நடிகர் விஜய்க்கு எதிரான கருத்துக்களை தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வாதிட்டார். நுழைவு வரி வசூலிப்பதா வேண்டாமா என்பது 20 ஆண்டுகளாக இருந்த பிரச்சனை என்றும், சுங்க வரி விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது என்பதால், மத்திய அரசு தான் சட்டம் இயற்ற முடியும் என்றும், இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை இருந்ததாலேயே 20 சதவீதம் செலுத்தப்பட்டு, தற்போது 80 சதவீதமும் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

நடிகர் விஜய் வழக்கு ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என கூறியிருப்பதாகவும், அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டினார். நடிகர்கள் நுழைவு வரி செலுத்த்வதில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும், ரசிகர்கள், உண்மையான கதாநாயகர் என நினைக்கும் நிலையில், ரீல் கதாநாயகராக இருக்க கூடாது, வரி செலுத்த மறுப்பது சட்டவிரோதம் போன்ற நீதிபதியின் கருத்துக்கள் தேவையற்றது என மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார். கடின உழைப்பால் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது என்றும் வாதிட்டார்.

சினிமாத் துறை லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவும், வரி ஏய்ப்பு எண்ணம் ஏதுமில்லை என்றும், மற்றவர்களைப் போல தானும் வழக்கு தொடர்ந்ததாக விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. தன்னை தேச விரோதியாக கூறுவது தவறு என்றும், நீதிபதியின் கருத்துக்கள் வேறு எந்த வழக்கிலும் கூறப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நீதிபதிகள் கடும் கருத்துக்களை தெரிவிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், சில வழக்குகளில் நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துபவரை ஆய்வு செய்யலாம் என்றும், அவர்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கலாம் என்றும், ஆனால் இந்த வழக்கில் தேவையில்லை என வாதிடப்பட்டது. வரி கேட்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் குறுக்கிட்ட கருத்துக்களை நீக்கக்கோரி சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் ஏன் கோரிக்கை வைக்கக்கூடாது என கேள்வி எழுப்பினர்.

தன் வழக்கு மட்டும் அல்லாமல் நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் இதேபோன்று,
நடிகர்கள் என பொதுப்படையாக க்ருத்து தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த கருத்துகள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளதுடன், குற்றவாளி போல காட்டியுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கப்பட்டது.

ஒரு லட்சம் அபராதம் செலுத்துவதில் எந்த பிரச்னையுமில்லை என்றும், 2 கோடி செலுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் எதிர்மறை கருத்தை நீக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதிகுறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
[10/25, 16:25] Sekarreporter: பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுக்களை பயன்படுத்தி சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமிகளாக செயல்பட்டதாக கூறி வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்து நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் 14 பேர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வி.கே.சசிகலா வீட்டில் 2017 ம் ஆண்டு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, வி.எஸ்.ஜே.தினகரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர், பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையில் 1,600 கோடி ருபாய் மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகள் மூலம், பல்வேறு சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாக செயல்பட்டுள்ளதாக கூறி கங்கா பவுண்டேஷன், வி.எஸ்.ஜே தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள், பாலாஜி, பழைய மாமல்லபுரம் சாலையில் மார்க் ஸ்கொயர் ஐ.டி. பார்க், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறையினர் பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.

இதை எதிர்த்து தினகரன், பாலாஜி, கங்கா பவுண்டேஷன் உள்பட 14 பேர் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை, நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளை பெற்று இடத்தை விற்பனை செய்ததற்காக தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இடத்தை விற்பனை செய்துள்ளதால் தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இற்கு எதிர்ப்பு தெரிவித்து, வருமான வரித்துறை தரப்பு, கடும் நிதி நெருக்கடி காரணமாக ஸ்பெக்ட்ரம் மாலை விற்பனை செய்ய உரிமையாளர்கள் முடிவு செய்ததாகவும், அதற்காக அவர்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மூலம் சசிகலாவின் வழக்கறிஞரை அணுகியதாகவும், இந்த சந்திப்பு பண மதிப்பிழப்புக்கு முன் நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் மாலுக்கான தொகையை உரிமையாளர்களுக்கு வழங்க மேற்கொண்ட நடைமுறை, வாங்குபவரின் பெயர் இல்லாமல் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, பினாமி சட்டத்தை பயன்படுத்தியது சரியே எனவும் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, வருமான வரித்துறை தரப்பு விளக்கத்தை ஏற்று அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[10/25, 16:40] Sekarreporter: தமிழகம் முழுவதும் கோவில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம் கட்டப்பட்டது குறித்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள தொன்மையான கோவில்களை பாதுகாப்பது தொடர்பாக, 2015 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோவில்களை பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் பட்டியலை தயாரித்து, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

கோவில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாக தயாரிக்க வேண்டும்; கோவில்களில் ஸ்ட்ராங்க் ரூம் அமைத்து, இந்த சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஓதுவார்கள், அர்ச்சகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சிலைகள், நகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை இணைய தளங்களில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பதுடன், கோவிலுக்கு சொந்தமான நிலங்களுக்கான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அறங்காவலர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், பரம்பரை அறங்காவலர்களை அடையாளம் காண வேண்டும் எனவும் அறிவுறித்தி உள்ளனர்.

கோவில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும் எனவும், கோவில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு தனி தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்பன உள்பட 75 உத்தரவுகளை பிறப்பித்திருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், 75 உத்தரவுகளில் 38 உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 32 உத்தரவுகள் குறித்து விளக்கம் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதால், உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

இதேபோல தொல்லியல் துறை சார்பிலும் அறிக்கை அளிக்க அவகாசம் கோரப்பட்டது.

நீதிமன்றத்துக்கு உதவியாக ஆஜரான ரங்கராஜன் நரசிம்மன், உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாகவும்,
உத்தரவின்படி மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்காமல் சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளதாகவும், அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம் கட்டப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட்டதா என அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து மூன்று வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[10/25, 16:59] Sekarreporter: பொய் வழக்கு பதிவு செய்து தம்பதியை மிரட்டிய திருச்சி நாவல்பட்டு காவல் நிலையத்தினருக்கு 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் கோபால் என்பவர் வெல்டிங் பட்டறை வைத்திருந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு நாவல்பட்டு காவல் நிலையத்தினர் கடையையும், வீட்டையும் காலி செய்ய சொல்லி மிரட்டியதுடன், அவர் மீதும், அவரது மகன் மீதும் வழக்கு தொடரப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருவெறும்பூர் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கோபாலின் மனைவி அமுதா மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

டி.எஸ்.பி.யிடம் புகார் அளித்த அன்றே நவநீதகிருஷ்ணன் என்பவர் தாக்கியதால், அவர் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்ததால் தன் மீதும், கணவனர் மீதும் மற்றொரு பொய் வழக்கு பதியபட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு ஆணையத் தலைவர் சித்தரஞ்சன் மோகந்தாஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறையின் மனித உரிமை மீறலில்.ஈடுபட்டது நிரூபணமாவதாக கூறி, அமுதாவிற்கு இழப்பீடாக 3 லட்சத்தை 8 வாரங்களில் வழங்கவும், காவல் நிலையத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

You may also like...