Madras high court orders march 23

    [3/23, 12:05] Sekarreporter: அஜீத்தின் வலிமை படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதற்கு தடை தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    நடிகர் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், 2016ல் வெளியான தனது “மெட்ரோ” படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெ. ஜெயகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார். வசதியான வாழ்கைக்காக சங்கிலி பறிப்பது, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போல காட்சிப்படுத்தப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. பிற மொழிகளில் மெட்ரோ படத்தை தயாரிக்க உள்ள நிலையில், அதே அம்சங்களுடன் வலிமை படமாக்கப்பட்டது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளார். எனவே வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் வலிமை திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ஜூ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானதால், அதற்கு தடை கோரி கூடுதல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் ஹெச். வினோத் தரப்பு பதில் மனுவை வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் தாக்கல் செய்தார்.

    அந்த பதில் மனுவில், செய்தித்தாள்களில் அன்றாடம் வரும் சங்கிலி பறிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை போன்ற செய்திகளின் அடிப்படையில் உருவான வலிமை படத்தின் கதை, கரு, கதாப்பாத்திரங்கள், உச்ச காட்சி அனைத்தும் வெவ்வேறானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ படத்தின் கதை, கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டதாக கூறுவது தவறு என்றும், எனவே எந்த காப்புரிமையையும் மீறவில்லை என்றும் பதில் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் வெளியான விமர்சனங்களில் மெட்ரோவை ஒப்பிட்டு கூறப்படவில்லை என்றும், தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வழக்கு தாக்கல் செய்த ஜெயகிருஷ்ணனுக்கு எதிராக 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெருந்தொகை மூலதனத்தில் எடுக்கப்பட்ட வலிமை படத்தை, ஓடிடி தளங்களில் வெளியிடவும், சாட்டிலைட் உரிமை தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்றும், இந்நிலையில் தடை விதித்தால் பெருத்த பாதிப்பு ஏற்படும் என்பதால், மெட்ரோ படத் தயாரிப்பாளர் ஜெயக்கிருஷ்ணன் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என இயக்குனர் வினோத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    பதில் மனுவை ஏற்ற நீதிபதி, வலிமை படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டிற்கு தடைவிதிக்க மறுத்து, பிரதான வழக்கின் விசாரணையை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
    [3/23, 13:40] Sekarreporter: நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், ஜெயக்குமாரின் மகளை கைது செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

    சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

    முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யபட்ட ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரதீபா மற்றும் மருமகன் நவீன் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் கோரிய மனுவை ஆலந்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    அந்த மனுவில், தான் மைனராக இருந்ததால் தந்தையும், சகோதரர் மகேசும் மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்ததாகவும், தந்தை மறைவிற்கு பிறகு மகேஷ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 6 வருடங்களுக்கு முன்பான சம்பவத்தில் தாமதமாக புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் 8 மாதங்கள் கழித்து தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொய் புகாரில் பதிவான வழக்கில், இந்த விவகாரத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதியபட்டுள்ளதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரினர்.

    இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 30ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    அதுவரை ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியாவை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்.
    [3/23, 16:02] Sekarreporter: அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி – கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான இறுதி விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம், மார்ச் 30ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலுக்கு தடை விதிக்க கோரி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. – கே.சி.பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத பழனிச்சாமி இந்த வழக்கை தாக்கல் செய்ய எந்த அடிப்படை உரிமையும் இல்லை எனவும், கட்சி நிர்வாகிகளை துன்புறுத்தும் நோக்கில் அற்ப காரணங்களுக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

    கட்சி உறுப்பினராக இல்லாத நபர், கட்சியின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது எனவும், கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்டதால் வெளியேற்றப்பட்ட பழனிச்சாமி தாக்கல் செய்துள்ள இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

    நிராகரிக்க கோரிய மனுவுக்கு பதிலளித்து கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த பதில் மனுவில், கட்சியில் இருந்து தன்னை நீக்கியபோது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காததால், தன்னை நீக்கியதே சட்டவிரோதம் என்பதால், இந்த வழக்கை தாக்கல் செய்ய தனக்கு அடிப்படை உரிமை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    கட்சியின் செயல்பாடுகளை தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்ததாக அதிமுக கூறியுள்ளது தவறு எனவும், சக உறுப்பினர்களின் எண்ணத்தையே பிரதிபலித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு எதிராக தான் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

    தேர்தல் தொடர்பான வழக்கை நிராகரிக்க கோரிய மனு மீதான இறுதி விசாரணையை நீதிபதி வேல்முருகன் மார்ச் 30ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
    [3/23, 16:02] Sekarreporter: லஞ்ச புகாரில் சிக்கிய திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞராக இருந்த தனலட்சுமி நீக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றிய தனலட்சுமி மீது லஞ்ச புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை நீக்கி தமிழக அரசு 2019ல் உத்தரவு பிறப்பித்தது.

    இந்த உத்தரவை ரத்து செய்து, அரசு சிறப்பு வழக்கறிஞராக நீடிக்க உத்தரவிடக் கோரி தனலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தனது கடின உழைப்பால் 439 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாகவும், 16 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் தனலட்சுமி தரப்பில் வாதிடப்பட்டது.

    மொட்டை கடிதத்தின் அடிப்படையில், தன் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

    இதை மறுத்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், மொட்டை கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், திருவள்ளூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் புகார் மீது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலம் விசாரணை நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை பெற்ற பிறகே சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

    மேலும், சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் லஞ்சம் பெற்று வழக்கை பலவீனமாக்கியுள்ளதாகவும், இந்த வகையில் 150 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகியுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரர் லஞ்சம் கேட்டதற்கும், வழக்குகளில் சமரசம் செய்து வைத்ததற்கும் ஆதாரங்கள் உள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

    மேலும், உண்மை என்பது சூரியன் போன்றது எனவும் அதை எப்போதும் மறைக்க முடியாது என்றும், ஒவ்வொரு வழக்கறிஞரும் நீதிமன்ற அதிகாரிகள் எனவும், நீதி பரிபாலனத்துக்கு அவர்கள் தான் முக்கிய தூண்கள் எனவும் அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு வழக்கறிஞர்கள், நேர்மையாக செயல்பட வேண்டும் எனவும் அவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் செயல்பட்டால் குழப்பங்கள் தான் ஏற்படும் என தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
    [3/23, 16:14] Sekarreporter: ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி நளினிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தென்சென்னை காங்கிரஸ் மாவட்ட தலைவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, அதே வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினியும், ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    இந்நிலையில், நளினிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்தழகன், மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி, தொடர்ந்து நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனுக்களை தாக்கல் செய்து, வருவதாகவும், சுதந்திர இந்தியாவில் எந்த வழக்கிலும் எந்த கைதியும் இதுபோல் நீதிமன்றத்தை நாடியதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

    உச்ச நீதிமன்றம், பேரறிவாளனுக்கு மட்டும் தான் ஜாமீன் வழங்கியுள்ளதாகவும், அந்த உத்தரவு மற்ற கைதிகளுக்கு பொருந்தாது எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமரை கொன்ற இவர்கள், வெறும் கொலை குற்றவாளிகள் மட்டுமல்ல எனவும், இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்பு மற்றும் இந்திய அரசியல் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் கொலை வழக்கு இது எனவும் கூறியுள்ளார்.

    இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாகி விடும் எனவும், கைதிகளுக்கு ஆதரவாக மாநில அரசு வாதங்களை முன்வைக்கும் என்பதால் தன்னையும் இந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
    [3/23, 16:55] Sekarreporter: காவல்துறை உதவி ஆய்வாளரால் தாக்கப்பட்ட ஊர்காவல்படை வீரருக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை புனித தோமையர் மலை காவல் நிலையத்தில் ஊர்காவல் படை வீரராக பணியாற்றிய தணிகாச்சலம் தாக்கல் செய்த புகார் மனுவில், கடந்த 2004ம் ஆண்டு சீருடையில் இரவு பணிக்கு வந்த போது, பணியில் இருந்த உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் லட்சுமணன் ஆகியோருக்கு சல்யூட் வைத்ததாகவும், அதன் பின்னர் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்த போது உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், தன்னை தகாத வார்த்தைகளில் தரக்குறைவாக திட்டியதாகவும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து தாக்கியதாகவும், இது தொடர்பாக மேல் அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    புகாரை விசாரித்த ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் காவல்துறைக்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்ட ஊர்க்காவல் படையினரை லஞ்சம் வாங்குவது உள்ளிட்டவைகளுக்காக பயன்படுத்துவதாகவும் கூறி, தணிகாச்சலத்திற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக அவருக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாயை எட்டு வார காலத்திற்குள் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    [3/23, 17:39] Sekarreporter: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீராமிதுனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னைசென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

    அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும் அவரை கைது செய்து ஏப்ரல் 4ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
    [3/23, 22:16] Sekarreporter: போக்சோ வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி, மேஜராகி விட்டால் அவரை மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கோவை மாவட்டத்தில், சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக கணேசன் என்பவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. கோவை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரையும், இரு மருத்துவர்களையும் மீண்டும் அழைத்து குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி, குற்றம் சாட்டப்பட்ட கணேசன், சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

    ஆனால், போக்சோ சட்டப்படி பாதிக்கப்பட்ட சிறுமியை, மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரிக்க முடியாது எனக் கூறி, கணேசனின் மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து கணேசன் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவம் நடந்த போது மைனராக இருந்த பாதிக்கப்பட்ட சிறுமி, தற்போது மேஜராகி விட்டதால் அவரை விசாரிக்க அனுமதிக்கலாம் எனவும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்காதது குற்றம் சாட்டப்பட்டவருக்கு அநீதி இழைத்ததற்கு சமம் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

    இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது, 21 வயதாவதால் போக்சோ சட்டத்தின் கீழான தடை செயல்பாட்டுக்கு வராது என்பதால், பாதிக்கப்பட்டவர் உள்பட மூன்று பேரையும் மீண்டும் அழைத்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டார்.

    இதுசம்பந்தமாக, 6 ஆயிரம் ரூபாய் செலுத்தி, சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய மனுதாருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்த மனுவை பரிசீலித்து குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்க உத்தரவிட்டதுடன், 6 ஆயிரம் ரூபாயை தலா 2 ஆயிரம் வீதம் மூன்று சாட்சிகளுக்கும் வழங்க உத்தரவிட்டார்.

    குறிப்பிட்ட தேதியில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய மனுதாரர் தரப்பில் தவறினால், அதன்பின், அவர்களை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

You may also like...