Madras high court orders january 22-

[1/22, 08:55] Sekarreporter 1: காவல்துறையினர் லத்திய அடித்ததில் மதுபாட்டிலுடன் வாகனத்தில் வந்தவரின் மண்டை உடைந்த விவகாரத்தில் நாகை எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு – புதுச்சேரி எல்லையில் உள்ள மேலவாஞ்சூர் பகுதியில் ஜனவரி 16ம் தேதி இரவு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த சசிக்குமார், பாலமுருகன் ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அப்போது போலீசார், மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கையை காட்டினர். உடனே சசிக்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னால் அமர்ந்திருந்த பாலமுருகன் இறங்கி வந்தார். அப்போது அவரது கையில் மறைத்து வைத்திருந்த மதுபாட்டில் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன சசிக்குமார் அங்கிருந்து மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்சென்றுள்ளார்.

அப்போது போலீஸ்காரர் ஆனந்தராஜ் என்பவர் தனது கையில் வைத்திருந்த லத்தியை சசிக்குமாரை நோக்கி வீசியுள்ளார். இதில் அவரது தலையில் லத்தி பட்டு மண்டை உடைந்தது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சசிகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக தினத்தந்தி நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், இதுகுறித்து ஆறு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
[1/22, 08:55] Sekarreporter 1: காவல்துறையினர் தாக்கியதில் நாமக்கல் மாற்று திறனாளி பிரபாகரன் மரணமடைந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய புலன் விசாரணை பிரிவு டிஜிபி-க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் வீட்டில் நடந்த நகை திருட்டு வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் சேலம் மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான பிரபாகரனை ஜனவரி 11ம் தேதி சேந்தமங்கலம் போலீசார் கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.

பின்னர் ஜனவரி 12ம் தேதி சிறையில் இருக்கும்போதே, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பிரபாகரன் கூறியதன் அடிப்படையில் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று இரவு 11:40 மணியளவில் பிரபாகரன் உயிரிழந்தார்.

பிரபாகரனின் மரணம் தொடர்பாக சேந்தமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் உட்பட மூன்று பேர் சேலம் டிஐஜி-யால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி, மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு இயக்குனருக்கு, ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், காவல் நிலையத்தில் உள்ள க்ண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறவும் ஆணையத்தின் தலைவர் நீதிபதி பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
[1/22, 11:54] Sekarreporter 1: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என தமிழக தலைமைச் செயலாளர், சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார்.

கோவை அவினாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்தி, அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளை அகற்ற உத்தரவிடக் கோரி, கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள், பிறப்பித்த அறிவிப்புகள் குறித்து விரிவான பதில்மனுவைத் தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு தாக்கல் செய்த பதில்மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிலைகள் அமைக்க அனுமதி கோரி அளிக்கும் விண்ணப்பங்களை பல்வேறு துறைகளின் ஆய்வுக்கு உட்படுத்தி, முதல்வரின் உத்தரவைப் பெற்று வருவாய் துறை இறுதி உத்தரவை பிறப்பிக்கும் வகையில் கடந்த 2017ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த அரசாணையின் அடிப்படையில், வருவாய் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு நிலங்கள், நீர்நிலைகள், சாலைகள், புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடங்களை ஆக்கிரமிக்கப்படாமல் சிலைகள் அமைக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வருவாய் துறை அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலைகள் அமைக்கப்படுவதால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படுமா என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கை பெற வேண்டும் எனவும், பட்டா நிலங்களில் அமைக்கப்படும் சிலைகளை பராமரிப்பதற்கான செலவை, சிலை அமைப்பவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் தனது பதில்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் – ஒழுங்கு பிரச்னை, உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி, நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டே சிலைகள் அமைக்க அனுமதியளிக்கப்படுவதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைக்க எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[1/22, 13:21] Sekarreporter 1: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன் லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சென்னை கே.கே.நகரில் உள்ள பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்து, தனது கணவரை விடுதலை செய்யக் கோரி, ராஜகோபாலனின் மனைவி சுதா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் தனது கணவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அப்போது ஆன்லைன் வகுப்புகள் ஏதும் நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளார்.

தாமதமாக அளிக்கப்பட்ட புகாரில், முழுமையாக உண்மையை கண்டறியாமல் செவி வழி தகவலின் அடிப்படையில் வழக்குப்பதியப்பட்டு உள்ளதாகவும், எந்த ஆதாரங்களும், அடிப்படையும் இல்லாமல் தனது கணவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளராகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வு, சம்பவம் நடைபெற்ற போது ஆன் லைன் வகுப்புகள் இல்லை என்பதை கருத்தில் கொள்ளாமல், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பதற்கான காரணங்களை, குறித்த காலத்தில் வழங்கவில்லை என்றும் கூறி, ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
[1/22, 14:02] Sekarreporter 1: தமிழக முன்னாள் பாஜ தலைவர் தமிழிசையை அவதூறாக விமர்சித்ததாக நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கடந்த 2017ல் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

இதையடுத்து, பல்லாவரம், பம்மல், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நாஞ்சில் சம்பத்துக்கு எதிராக புகார்கள் கொடுக்கப்பட்டு பெண் கொடுமை பாதுகாப்பு சட்டப் பிரிவின் கீழும், அவதூறு சட்டப் பிரிவின்கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி நாஞ்சில் சம்பத் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பெண் கொடுமை பாதுகாப்பு சட்டப் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதில் உள்நோக்கம் உள்ளதாகவும், வேண்டுமென்றே இந்த பிரிவை சேர்த்துள்ளதாகவும் நாஞ்சில் சம்பத் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழிசையை மட்டுமல்லாமல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் நாஞ்சில் சம்பத், கொச்சையாக விமர்சனம் செய்துள்ளதாக புகார்தாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுத்ததுடன், பெண் கொடுமை தடுப்பு சட்ட வழக்கை பல்லாவரம் போலீசார் விசாரிக்கலாம் என்றும், மற்ற வழக்குகள் தொடர்பான ஆவணங்களையும் புகார்தாரர்கள் பல்லாவரம் போலீசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
[1/22, 14:55] Sekarreporter 1: பேருந்து நிலையம் அமைந்துள்ள நிலத்திற்கான குத்தகை பாக்கியை இரண்டு வாரங்களில் செலுத்தாவிட்டால், இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க பசுபதீஸ்வரர் கோவில் நிர்வாகத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என சேலம் மேச்சேரி பேரூராட்சியை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சேலம், மேச்சேரியில் உள்ள பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 46 செண்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்த மேச்சேரி பேரூராட்சி, அங்கு பேருந்து நிலையம் மற்றும் கடைகள் அமைத்துள்ளது.

இந்த நிலத்துக்கு 2002ம் ஆண்டு முதல் பேரூராட்சி நிர்வாகம் முறையாக வாடகை செலுத்தவில்லை என்றும், 2018ம் ஆண்டு வரை 13 லட்சத்து 39 ஆயிரத்து 167 ரூபாய் வாடகை பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, கோவில் நிலத்தில் பேருந்து நிலையத்துடன் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கான வாடகையைப் பெறும் பேரூராட்சி நிர்வாகம், கோவிலுக்கான வாடகையை செலுத்தாததால் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேச்சேரி பேரூராட்சி சார்பில், நிலத்துக்கான வாடகையை உயர்த்தி கோவில் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனு அரசிடம் நிலுவையில் உள்ளதால், வாடகை பாக்கியை கோவில் நிர்வாகம் கோர முடியாது என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, கோவில் நிலத்தில் கட்டப்பட்ட கடைகள் மூலம் வருவாய் ஈட்டும் பேரூராட்சி நிர்வாகம், இரண்டு வாரங்களில் வாடகை பாக்கி 13 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

குறிப்பிட்ட இந்த காலக்கெடுவுக்குள் வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால், கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கருதி, பேரூராட்சி நிர்வாகத்துக்கு எதிராக, இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோவில் நிர்வாகத்துக்கு அனுமதியளிக்கப்படும் என எச்சரித்த நீதிபதி, இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து பிப்ரவரி 2ம் தேதி அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
[1/22, 15:35] Sekarreporter 1: வாகன விபத்துகளில் சிக்கி ஊனச் சான்று பெற வருவோருக்கு ஒரு வார்டில் உள்ள நான்கு படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சி. ஜெகதீசன், விபத்தில் சிக்கியதால், இழப்பீடு கோரி மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை தாக்கல் செய்ய, மருத்துவ வாரியத்தின் ஊனச் சான்று பெறும் நடைமுறைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, நரம்பியல் பிரிவில் 30 நாட்கள் தங்க வைக்கப்பட்ட பின்னர், 40 சதவீதம் நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சான்றளிக்கப்பட்டது.

இதனையடுத்து ஊனச்சான்று பெறுபவர்களுக்கான தனி வார்டு உருவாக்க கோரியும், சான்று வழங்குவதற்கு காலக்கெடுவை நிர்ணயிக்கக் கோரியும் கடந்த 2018ஆம் ஆண்டு அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஊனச் சான்று பெற வருவோருக்காக தனி வார்டை அமைப்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஊனச்சான்று கோரி மருத்துவமனைக்கு வருபவர்களுக்காக, 11வது வார்டு பிரிக்கப்பட்டு அதில் உள்ள நான்கு படுக்கைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஏற்றுக் கொண்ட நீதிபதி, கூடுதல் படுக்கைகள் தேவைப்படும் பட்சத்தில் அவற்றையும் ஒதுக்க வேண்டுமென கூறி, வழக்கை முடித்துவைத்தார்.
[1/22, 17:03] Sekarreporter 1: இரண்டாம் நிலை வாரிசுதாரர்களுக்கான சான்றிதழை வழங்கும்படி தாசில்தார்களுக்கு உத்தரவிடுவது சரிதானா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு ஆராய வேண்டுமென தனி நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

இரண்டாம் நிலை வாரிசுதாரர் சான்றிதழ் கோரி அளித்த விண்ணப்பங்களை நிராகரித்த சம்பந்தப்பட்ட தாசில்தார்களின் உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி வெங்கடாசலம் உள்ளிட்டோர் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, இரண்டாம் நிலை வாரிசுதாரர் சான்றிதழ்களை தாசில்தார் வழங்க வேண்டும் என்றும், தாசில்தாருக்கு அதிகாரமில்லை என்றும் இரு வெவ்வேறு அமர்வுகள் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்து வாரிசுரிமை சட்டப்படி, இரண்டாம் நிலை வாரிசுதாரர்கள், தங்கள் அடையாளத்தை நீதிமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும் என்றும், வருவாய் துறை அதிகாரிகளுக்கு அந்த அதிகாரத்தை வழங்கினால், அது சட்டத்தின் நோக்கத்திற்கு எதிராக அமைந்துவிடுவதுடன், ஊழலுக்கும் வழிவகுக்கும் எனவும் நீதிபதி தண்டபாணி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளதால்,

வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக இரண்டாம் நிலை வாரிசுதாரர்களை அடையாளம் காணும் விவகாரத்தை தாசில்தாரிடம் ஒப்படைக்கலாமா,

வாரிசுரிமை சட்டப்படி வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடும் நடைமுறைக்கு மாற்றாக, புதிய நடைமுறையை உயர் நீதிமன்றம் உருவாக்க முடியுமா,

வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக வாரிசுரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை ஒதுக்கிவிட்டு, இரண்டாம் நிலை வாரிசுதாரர் சான்று வழங்க உத்தரவிடுவது சரிதானா
.
என்பது குறித்து விரிவாக ஆராய முழு அமர்வு அமைக்கும்படி தலைமை நீதிபதிக்கு, நீதிபதி தண்டபாணி பரிந்துரைத்துள்ளார்.
[1/22, 21:20] Sekarreporter 1: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, தனது சொத்துக்கான மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்து திருவள்ளூரைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி தண்டபாணி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்ற செயல்களை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும், நீதித்துறை தனது வாளை சுழற்றினால் தான், வாழ்வாதாரமான தண்ணீருக்கு பஞ்சம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும் எனவும், நீரை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

வருவாய் துறை அதிகாரிகள், இந்த ஆக்கிரமிப்புகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதற்கு உடந்தையாக இருப்பதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வருவாய் நிர்வாக ஆணையரை எதிர்மனுதாரராக சேர்த்து, ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

You may also like...