Madras high court orders january 21-

[1/20, 12:32] Sekarreporter 1: வாடகை பாக்கி 52 லட்ச ரூபாயை ஒரு மாதத்திற்குள் செலுத்த சென்னை அண்ணா நகர் கிளப்பிற்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், செலுத்தத் தவறும்பட்சத்தில் அந்த கிளப்பை அப்புறப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கும் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தில் செயல்பட்டுவரும், அண்ணா நகர் கிளப்பில் மதுபான கூடத்திற்கு அனுமதிக்கோரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வீட்டு வசதி வாரியம் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை முதலில் செலுத்துமாறு கடிதம் அனுப்பியது. இதனை எதிர்த்து அண்ணாநகர் கிளப் செயளாலர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், நிலுவையில் இருந்த 52 லட்சத்து 25 ஆயிரத்து 960 ரூபாய் வாடகை பாக்கியில் 20 லட்ச ரூபாயை செலுத்துவிட்டதாகவும், இருப்பினும் மீதமிருக்கும் நிலுவைத் தொகையை செலுத்துமாறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடிதம் அனுப்பியுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் கிளப் செயல்படுவதால், அதனுடைய விதிகளை தான் பின்பற்ற வேண்டுமெனவும், அதன் விதிகளை மீறி மனுதாரர் எந்த அனுமதியும் கோர முடியாது என தெரிவித்துள்ளார். அவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால் கிளப்பை அப்புறப்படுத்தலாம் எனவும், பார் செயல்படுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் அனுமதி அளிக்க சட்டத்தில் இடமில்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், 7 கிரவுண்ட் செயல்பட்டு வரும் கிளப்புக்கு வாடகையாக மாதம் 20 ஆயிரம் ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுவதாகவும், தற்போதைய சந்தை மதிப்புப்படி தகுந்த வாடகையை நிர்ணயிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தமிழக அரசுக்கு சொந்தமானது என்பதால் அதற்கு ஏற்படும் வருவாய் இழப்பு தமிழக அரசுக்கான வருவாய் இழப்பு என தெரிவித்துள்ள நீதிபதி, நிலுவை வாடகையை செலுத்த தவறினால் சட்ட ரீதியான நடவடிக்கையை கிளப் நிர்வாகத்தை எச்சரித்துள்ளார்.

நியாயமான வாடகையை நிர்ணயித்தும், நிலுவையில் உள்ள வாடகை தொகையை கணக்கிட்டும் அதனை 30 நாட்களில் கிளப் நிர்வாகத்திற்கு அனுப்ப தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, அந்த கடிதம் கிடைத்ததில் இருந்து நான்கு வாரங்களுக்குள் நிலுவை தொகையை செலுத்த வேண்டுமென கிளப் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு செலுத்தவில்லை எனில் கிளப் -பை காலி செய்வது, நிலுவை தொகை மற்றும் அபராதம் வசூலிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.
[1/20, 12:39] Sekarreporter 1: விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் ஆகியோர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ..

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி பொதுச் செயலாளர் மணியரசன்,
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,
ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பிரபாகரனுக்கு ஆதரவாகவும் பேசியதாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈரோடு மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சாட்சிகளுடைய வாக்குமூலங்களில் போதிய முகாந்திரம் இல்லை என்றும் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தனர் .இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் இருவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
[1/20, 13:44] Sekarreporter 1: இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட கவிஞர் லீனா மணிமேகலைக்கும், பின்னணி பாடகி சின்மயிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நடிகைகள், பாடகிகள் என சினிமா பிரபலங்கள் தங்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு ‘‘மி டூ’’ ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் பதிவு செய்தனர். அதன் ஒரு பகுதியாக இயக்குனர் சுசிகணேசனுக்கு எதிராக கவிஞர் லீனா மணிமேகலையும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார்.

இதுதொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதற்கிடையில் லீனா மணிமேகலையின் முடக்கப்பட்ட பாஸ்போர்ட் விடுவிக்கபட்டது மற்றும் தனது அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் சுசிகணேசன் இணைவது போன்ற விவகாரங்கள் கடந்த மாதம் சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சுசி கணேசன் குறித்து லீனா மணிமேகலையும், சின்மயியும் கருத்துக்களை பதிவிட்டனர்.

உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தனக்கு எதிராக லீனா மணிமேகலையும், பின்னணி பாடகி சின்மயியும் பரப்பி வருவதாகவும், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஃபேஸ்புக், கூகுள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களும், ((தி நியூஸ் மினிட்)) இணையதள செய்தி நிறுவனமும் பரப்பி வருவதால், தன்னைப் பற்றிய அவதூறு கருத்துக்களை வெளியிடுவதற்கும், பரப்புவதற்கும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட வேண்டுமெனவும்
இயக்குனர் சுசி கணேசன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, சுசி கணேசன் தரப்பில், லீனா மணிமேகலைக்கு எதிராக தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கு சைதாபேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளாதாகவும், தன்னை பழிவாங்கும் நோக்கத்துடன் லீனா மணிமேகலை, சின்மயி உள்ளிட்டோர் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணையவுள்ள நிலையில் திரைத்துறையில் தனது நற்பெயரை கெடுக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளியிட லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

மேலும் வழக்கு குறித்து லீனா மணிமேகலை, சின்மயி, கூகுள், பேஸ்புக், டிவிட்டர், தி நியூஸ் மினிட் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.
[1/20, 14:32] Sekarreporter 1: அரசு நிலத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்ததாக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து கனிமவளத்துறை கூடுதல் செயலர் பிப்ரவரி 3 ம் தேதிக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

தேனி மாவட்டம்,
உப்பார்பட்டியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில், அரசு நிலங்களிலிருந்து, அனுமதியின்றி, 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை உதவியாளர்கள் மூலமாக முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முறைகேடு நடந்துள்ளதாகவும், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசு நிலங்களிலிருந்து மணல் எடுத்த பிறகு, அந்த நிலங்கள் தனியார் சொத்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு வருவாய்த் துறை கனிமவளத் துறை உள்ளிட்ட அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது,
ஊழல் கண்காணிப்பு துறை சார்பில், விசாரணை நடைபெற்று வருவதாகவும்
ஓ பன்னீர் செல்வத்தின் மீதான குற்றச்சாட்டுகள் இருந்தால் கீழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,
ஊழல் கண்காணிப்பு துறை சார்பில், இந்தப் புகாரில் இரண்டு துறை அதிகாரிகளுக்கு இந்த குற்றத்தில் சம்பந்தம் உள்ளதாகவும், வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்,விசாரணை அதிகாரிக்கு ஒப்புதல் வழங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. கனிம வளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கனிமவளத் துறை கூடுதல் தலைமைச் செயலர் இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது . அனுமதி வழங்கியவுடன் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி வி.பாரதிதாசன் கனிமவளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிப்ரவரி 3ம் தேதிக்குள் மீது உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.
[1/20, 16:45] Sekarreporter 1: செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர் நிலையில் கட்டப்பட்டுள்ளதா, இல்லையா
என்பதை விளக்கும் வகையில் வரைபடத்துடன் கூடிய விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக கட்டப்படும் காவல் நிலையம் தாமரைக்கேணி என்ற நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாகவும் இந்த கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நீர்நிலையை பழைய நிலைக்கு கொண்டு வர கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி பேராசிரியர்கள் இரண்டு பேர் அடங்கிய குழுவை நியமித்து உத்தரவிட்டது. ஐ.ஐ.டி பேராசிரியர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் காவல்நிலையம் கட்டப்பட்ட இடம் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டபட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்துசெம்மஞ்சேரி காவல் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர தடை விதித்த நீதிபதிகள், தாமரைக்கேணி ஏரியை ஒட்டிய பகுதிகளில் மேற்கொண்டு எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு  கடந்த முறை விசாரணைக்கு வந்ததுபோது,  சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் ஆவணங்களின் அடிப்படையில் செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் நீர் நிலை என்றும், 1987 ஆம் ஆண்டு வருவாய் துறை ஆவணங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடம் மேய்க்கால் புறம்போக்கு என்றும் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்

இந்த நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது,அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்மந்தப்பட்ட இடம் 1906 லயே கிராம நத்தமாக வகைபடுத்தப்பட்டுவிட்டதாகவும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென்றும் கோரப்பட்டது

அதனை தொடர்ந்து வரைபடத்துடன் கூடிய விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல்
வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்
[1/20, 17:19] Sekarreporter 1: கோவில் மற்றும் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு தொடர்பாக வரைவு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கோவில் யானைகள், வளர்ப்பு யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது தமிழக அரசுத்தரப்பில், வளர்ப்பு யானைகள் பராமரிப்பு தொடர்பாக மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், யானைகளின் நடவடிக்கைகள் குறித்து வீடியோ பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கோவில் மற்றும் வளர்ப்பு யானைகள் தொடர்பாக அரசு, நிபுணர்களின் கருத்தை கேட்டு கொள்கை வகுக்க வேண்டும் என்றனர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, வரைவு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வரைவு விதிகளை 10 நாட்களில் மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த நான்கு வாரங்களில், அந்த வரைவு விதிகள் குறித்த ஆலோசனைகளை மனுதாரர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

ஸ்ரீரங்கம் மற்றும் எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமில் இனப்பெருக்கத்துக்காக ஆண் யானையை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் போது, தமிழக கோவில்களில் ஆண் யானைகள் இல்லை எனவும், கோவில் யானைகளை ஆண்டில் 48 நாட்கள் புத்துணர்வு முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் எந்த மாநிலத்திலும் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்கள் நடத்தப்படுவதில்லை என்றும், தமிழகத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்த நீதிபதிகள், யானைகள் இணை சேர்வது என்பது அவற்றின் இயல்பான நடவடிக்கைகளையும், இயற்கையையும் பொறுத்தது என்பதால், ஆண் யானையை கொண்டு வரும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஸ்ரீரங்கம் கோவில் யானைகளுக்காக கொள்ளிடத்தில் 10 ஏக்கர் நிலத்தில் வாழ்விடம் அமைக்க கோரிய வழக்கில், ஏற்கனவே 5 ஏக்கர் 48 செண்ட் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பகுதியில் யானைகள் வாழ்விடம் அமைப்பது தொடர்பாக வனத்துறை ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, யானைகள் வாழ்விடம் அமைப்பது தொடர்பான ஒப்புதல் கோரிய விண்ணப்பத்தின் மீதான நடைமுறை குறித்து விளக்கமளிக்க வனத்துறைக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
[1/20, 22:25] Sekarreporter 1: [1/20, 22:00] Former Miinister Jayakumar: Flash news

சசிகலா மீதான புகார் குறித்து வரும் 2 ம் தேதி வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதிமுகவின் பெயரை சசிகலா தொடர்ந்து பயன்படுத்துவதாகவும், இது தேர்தல் ஆணையத்தையும் நீதிமன்றத்தையும் அவமதிக்கும் செயல் எனவும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க மாம்பலம் காவல்துறை ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று, 17 வது நீதித்துறை நடுவர் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சசிகலா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இன்று மாம்பலம் காவல் ஆய்வாளர் தரப்பில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் சசிகலா மீதான புகார்களை உரிமையியல் நீதிமன்றத்தில் பரிகாரம் தேடிக்கொள்ளுமாறு குறிப்பிட்டும், இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிமுக தரப்பு வாதங்களை கேட்ட 17வது நீதித்துறை நடுவர், சசிகலா மீது சொல்லப்பட்டுள்ள புகார்கள் குறித்து குற்றவியல் நடைமுறை சட்டம் 200 இன் கீழ் நீதிமன்றமே விசாரிக்கும் என்றும், வருகிற 2 தேதி புகார்தாரர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கலாம் என்று வழக்கை ஒத்திவைத்தது. இதனை வருகிற 2ம் தேதி சசிகலாவின் மீதான புகார்கள் என்ன என்பது குறித்து நேரிலோ அல்லது, வீடியோ கான்பரசிங் மூலமோ விளக்கமளிக்க உள்ளார்.

You may also like...