Madras high court orders feb 7 th ஐகோர்ட் உத்தரவுகள் பிப் 7

[2/5, 07:15] Sekarreporter 1: அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு மின்கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை ஐந்து மடங்கு அதிகமாக விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதியின்றி கட்டிடம் கட்டியுள்ளதாக கூறி, சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த காஞ்சனா என்பவருக்கு சொந்தமான வீட்டுக்கு சீல் வைக்க மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து காஞ்சனா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மனுதாரருக்கு எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் அந்த உத்தரவில், ஆக்கிரமிப்புகளையும், விதிமீறல்களையும் கண்டறிய டிரோன் போன்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், சிறப்பு அதிரடி படை அமைக்கவும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், விதிமீறல் கட்டிடங்களுக்கு வர்த்தக கட்டிடங்களுக்கான கட்டணத்தில் ஐந்து மடங்கு அதிகமாக மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை விதிக்கும்படி உத்தரவிட்டனர்.

அதேபோல கட்டுமானங்கள் முடிந்த பின் கட்டிடத்துக்கு ஒப்புதல் கோரிய விண்ணங்களை ஏற்கக் கூடாது என அறிவுறுத்தினர்.

கட்டிட அனுமதி கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு நியாயமான அவகாசம் வழங்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், உடனடியாக ஒப்புதல் வழங்க கோருவது என்பது லஞ்ச லாவண்யத்தையே ஊக்குவிக்கும் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
[2/5, 13:48] Sekarreporter 1: வரதட்சணை குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததாலும், இரண்டாவது மணம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாலும் கணவருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறை தண்டனையை 2 ஆண்டுகளாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், அன்னிமங்கலத்தைச் சேர்ந்த முருகானந்தமும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த தமயந்தியும் 2001ல் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இருவருக்கும் தமிழமுதன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், தன்னை புகுந்த வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டதாகவும், மேலும் சட்டவிரோதமாக, தனது சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி, முருகானந்தம், அவரது பெற்றோர், சகோதரர் உறவினர்களுக்கு எதிராக, தமயந்தி, ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், முருகானந்தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அபராதத்தொகையை தமயந்திக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டது.

அதேபோல குற்றம்சாட்டப்பட்ட முருகானந்தத்தின் உறவினர்களுக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாமக்கல் நீதிமன்றம் பிறப்பித்த இந்த தீர்ப்பை எதிர்த்து முருகானந்தம் உள்ளிட்ட அவரது உறவினர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, முருகானந்தம் மீதான வரதட்சணை தடைச் சட்டம், வன்கொடுமை தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பெண்கள் கொடுமை தடுப்பு சட்டம், முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொண்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையை இரு ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்தார்.

மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகானந்தத்தின் உறவினர்களை விடுதலை செய்த நீதிபதி, பெண்களின் வலிமையை குறைத்து மதிப்பிடுவது சமுதாயத்தில் தொடர்வதாகவும், அதற்கு பெண்களே பழியாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
[2/5, 14:36] Sekarreporter 1: ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சாட்டை துரைமுருகன் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஓரகடத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் உள்ள பணியாளர்கள் தரமற்ற உணவை உட்கொண்டதால் இறந்துவிட்டதாக தகவல் பரவியதை அடுத்து, பிற தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திருவள்ளூர் தாலுக்கா போலீஸார், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

அவ்விசாரணையின் அடிப்படையில், திருச்சியை சேர்ந்த ’சாட்டை’ துரைமுருகன் என்பவர் மீது வன்முறையை தூண்டுதல், அவதூறு செய்தி பரப்புதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜனவரி 19-ம் தேதி இரவு அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

இச்சூழலில், `சாட்டை’ துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சாட்டை துரைமுருகன் தாக்கல் செய்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் மீதான இந்த வழக்கின் அடிப்படையில் தான் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை பிப்ரவரி 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்
[2/5, 16:49] Sekarreporter 1: முன்னுக்கு பின் முரணான சாட்சியங்கள் காரணமாக, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தர்மபுரி மாவட்டம், ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பள்ளி ஆசிரியர் செந்தில்குமார், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மாணவி ஒருவரின் தந்தை புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தர்மபுரி மகளிர் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் செந்தில்குமாருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2018ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து செந்தில்குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை, நீதிபதி மஞ்சுளா விசாரித்தார்.

விசாரணையின் போது, கீழமை நீதிமன்ற விசாரணையின் போது உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிகளின் வாக்குமூலமும், புகார் அளித்த மாணவியின் தந்தையின் வாக்குமூலமும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதாகவும், தாமதமாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர் செந்தில்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில், ஆசிரியரின் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக, தயக்கம் காரணமாக மாணவிகள் தாமதமாக பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், அதை தீவிரமாக கருத வேண்டியதில்லை என்றும், மாணவிகளின் வாக்குமூலங்கள் தெளிவாக இருப்பதால் தண்டனையை ரத்து செய்யக் கூடாது என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தீவிரமாக கருத வேண்டும் எனவும், குழந்தைகளின் சாட்சியங்கள் முன்னுக்கு முன் முரணாக இல்லாமல் தெளிவாக இருக்கும் சாட்சியங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கில் சாட்சியம் அளித்த மாணவி, பாலியல் தொல்லை பற்றி ஏதும் குறிப்பிடவில்லை என்றும், மாணவிகளின் சாட்சியங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளதாகவும் கூறி, ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

மேலும், முன்னுக்குப்பின் முரணான ஆதாரங்களுக்கும், சாட்சியங்களுக்கும் உரிய வலுவை கொடுக்காவிட்டால் அது நீதி வழங்கும் நோக்கத்தையே வீழ்த்தி விடும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
[2/5, 17:23] Sekarreporter 1: சட்டவிரோதமாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் நீடிப்பதை மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 1980ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியரால் இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்ட கண்ணம்மாள் என்பவர், 1981 பெரம்பலூர் மாவட்டம் லடாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2005ம் ஆண்டு அவர் ஓய்வுபெற்ற போதும்,
உயர் நீதிமன்ற உத்தரவின்படி இவரது பணி வரன்முறை செய்யப்பட்ட போதும், பணியாற்றிய காலத்திற்கான ஊதிய உயர்வு மற்றும் ஊதிய பாக்கியை தர மறுத்து 2008ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கண்ணம்மாள் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணக்கு வந்தது.

அப்போது, இளநிலை உதவியாளராக பணியாற்றியபோது அவரது பணி வரன்முறைபடுத்தபடவில்லை என்றும், தவறுதலாக அவரது பெயர் தமிழ் ஆசிரியருக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஊதிய உயர்வு பெற அவருக்கு தகுதியில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இளநிலை உதவியாளர் மற்றும் தமிழாசிரியர் போன்ற பதவிகள் அரசு பணியாளர் தேர்வாணையம் வழியாக தேர்வு செய்யப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளார்

கல்வித்தகுதியை ஆராயாமல் தமிழாசியராக நியமிக்கப்பட்டு 23 ஆண்டுகளாக பணியில் நீட்டிக்க அனுமதித்தே சட்டவிரோதம் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிக பதவியில் 25 ஆண்டுகள் நீட்டித்த அவரை நீக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது சட்டத்தை மீறிய செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் ஊதிய உயர்வு மற்றும் ஊதிய பாக்கியை மறுத்து பிறப்பித்த உத்தரவில் தலையிட தேவையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்டு, இதேபோல தற்காலிகமாக சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் பணியில் நீட்டிப்பதை மறு ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய சரியான தருணம் இது எனவும் உத்தரவில் அரசை வலுயுறுத்தியுள்ளார்.
[2/5, 20:17] Sekarreporter 1: ஜீவஜோதி மற்றும் அவரது கணவர் தண்டபாணி ஆகியோர் மீதான மோசடி வழக்கில் மூன்று மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேதாரண்யம் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு தொழில் தொடங்குவதற்காக ஜீவ ஜோதியும்
அவரது கணவர் தண்டாயுதபாணியும் தங்கள் வீட்டை அடமானமாக
வைத்து பெற்ற 10 லட்சம் ரூபாய் கடனை திருப்பித் தராமல்,
உறவினர்கள் அடியாட்களுடன் வந்து தன்னை மிரட்டி அடமான
பத்திரத்தை பிடுங்கிச் சென்று விட்டதாக நாகப்பட்டினம் மாவட்டம்,
வேதாரண்யத்தைச் சேர்ந்த வேதராசு என்பவர் வேதாரண்யம் காவல்
நிலைத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில்
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை
என்பதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேதாரண்யம் போலீசாருக்கு உத்தரவிடக் கோரி வேதராசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், இந்த வழக்கில் 3
மாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என வேதாரண்யம் போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணை தள்ளி வைத்துள்ளார்.
[2/7, 11:31] Sekarreporter 1: புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டதா? இல்லையா என விளக்கமளிக்க மத்திய தொல்லியல் துறைக்கும், தமிழக இந்துசமய அறநிலையத் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கோவிலில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகாவில் டி.மாங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தொல்லியல் துறை சார்பில் இந்த கோவிலில் மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் என அடிப்படைவசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், பாதுகாக்கப்பட்ட கோவிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் எனவும், அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்வது குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வது குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டும், அதற்கு தொல்லியல் துறை எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும், ஆன்மீக நடவடிக்கையாக இல்லாமல், வர்த்தக நடவடிக்கையான இந்த வசதிகளை கோவிலுக்கு வெளியில் செய்து கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கை வேலியே பயிரை மேய்வதைப் போன்றது என்பதால், கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கவேண்டும் எனவும், புதிய கட்டுமானங்களை அப்புறப்படுத்தி, பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, கட்டுமானங்கள் புராதன சின்னத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன, கட்டுமானங்களுக்கு அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து விளக்கமளிக்க, மத்திய தொல்லியல் துறைக்கும், தமிழக இந்து சமய அறநிலைய துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
[2/7, 11:52] Sekarreporter 1: கோவில் நிலங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கு அதிகாரிகளை பொறுப்பாக்கும் வகையில் கொள்கை மாற்றம் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அனுமந்தராய ஸ்வாமி கோவில் உள்ளிட்ட ஏழு கோவில்களுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலங்களில் அதிகாரிகளின் உதவியுடன் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகள் மூலம் நபர்கள் கொள்ளையடிக்கப்படுவதாகக் கூறி ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இந்த நிலங்களை மீட்டு, கோவில்களின் செயல்பாட்டுக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர், ஆய்வு கூட்டம் நடத்தியதாகவும், சட்டவிரோத குவாரிகளுக்கு கனிமவளத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கோவில் நிலங்களில் நடக்கும் சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளை தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற மற்றும் சிவில் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டார்.

கோவில் நிலங்களில் சட்டவிரோத குவாரி நடக்கும் விவகாரத்தில் அரசு ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கவும், கண்காணிக்கவும் அரசுத்துறைகளுக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தார்.

மேலும், உன்னதமான ஆன்மாக்கள், கோவில்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் சொத்துக்களை தானமாக வழங்கியுள்ளதாகவும், அவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை கோவில் நிர்வாகத்துக்கு உள்ளதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

கோவில் சொத்துக்களை முறையாக பராமரிக்க தவறும் அதிகாரிகளை, இந்த குறைபாடுகளுக்கு பொறுப்பாக்க வேண்டும் எனவும், கோவில் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்படாததால், அவை கொள்ளையடிக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, தற்போது இந்து சமய அறநிலையத் துறை சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும், அது போதுமானதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

கோவில் சொத்துக்களை மீட்கும் விஷயத்தில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்திய நீதிபதி, தனி குழு நியமித்து திறமையாகவும், விரைவாகவும் இச்சொத்துக்கள் மீட்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதிகளவில் முறைகேடுகளை அனுமதிப்பதன் மூலம் அரசு துறை தனது கடமையை தவறிவிட்டதால், அரசுத்துறை அதிகாரிகளை பொறுப்பாக்கும் வகையில் கொள்கை மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும், சொத்துக்களை மீட்பதுடன், வருவாய் இழப்பையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் வலியுறுத்தியுள்ளார்.
[2/7, 13:05] Sekarreporter 1: சிவசங்கர் பாபாவின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை கோரியும், சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க கோரியும் சிவசங்கரனின் சகோதரி தாக்கல் செய்த வழக்கில் காவல்துறையும், சிறைத்துறையும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கடந்த அண்டு ஜூன் 16ஆம் தேதி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர்பாபாவின் சகோதரி ஜெயலட்சுமி கணபதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நீரிழிவு, பக்கவாதம், இதய நோய் உள்ளிட்டவற்றால் அவதிப்படும் தனது சகோதரருக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது தற்போதைய உடல்நிலை குறித்து தனக்கு அறிக்கை அளிக்கும் படியும், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சொந்த செலவில் சிகிச்சை பெற அனுமதிக்க கோரியும் சிபிசிஐடி காவல்துறையிடமும், புழல் சிறை நிர்வாகத்திடமும் ஜனவரி 23ஆம் தேதி மனு அளித்தும் கருத்தில் கொள்ளவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தனது கோரிக்கை மனுவை பரிசீலிக்கக் உத்தரவிட வேண்டுமென ஜெயலட்சுமி மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து காவல்துறையும், சிறைத்துறையும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 11ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.
[2/7, 16:18] Sekarreporter 1: சென்னை மாநகராட்சி தேர்தலில், பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்த உத்தரவை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சென்னை மாநகராட்சியில், மண்டல அளவில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், மொத்த இடங்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் ஜனவரி 17ம் தேதி வார்டு ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதில், சில மண்டலங்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், சில மண்டலங்களில் 50 சதவீதத்துக்கு அதிகமான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை சூளைமேட்டை சேர்ந்த முத்துராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 66 லட்சத்து 72 ஆயிரத்து 103 என்றும், இதில் 70 சதவீதமான 46 லட்சத்து 46 ஆயிரத்து 732 பேர் சென்னையின் மையப்பகுதியில் வசிப்பதாகவும், 20 லட்சத்து 25 ஆயிரத்து 371 பேர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை அடிப்படையில் வார்டு பிரிக்கும் போது நகரின் மையப் பகுதியில் வார்டுகள் சிறியதாகவும், பிற பகுதிகளில் பெரியதாகவும் இருக்கும் எனவும், அந்த பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை சமமான அளவில் மேற்கொள்வதில் சிக்கல் எழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின் எப்படி தலையிட முடியும் எனவும், அரசியல் சாசன தடை உள்ள நிலையில் வார்டு வரையறையில் எப்படி தலையிட முடியும் எனவும் கேள்வி எழுப்பி, மனுதாரர் தரப்பு விளக்கமளிக்க அறிவுறுத்தினர்.

இதற்கு பதிலளித்து, உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஓம்பிரகாஷ் வாதங்களை முன் வைத்தார்.

சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆகியோர், வார்டு மறுவரையறை செய்து 2018ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது எனவும், அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கு வேண்டும் எனவும், தேர்தல் அறிவிப்புக்கு பின் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், முன்பே வழக்கு தொடர்ந்திந்தால், மீண்டும் வார்டு மறுவரையறை செய்யப்பட்டிருக்கும் என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
[2/7, 17:38] Sekarreporter 1: நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருந்தது போன்ற வீடியோ காட்சி வெளியான விவகாரம் தொடர்பாக வழக்கில் மறுவிசாரணை நடத்தக்கோரி நடிகை ரஞ்சிதா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

பிடதி ஆசிரம தலைவர் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்தது போன்ற வீடியோவை தனியார் (சன்) தொலைக்காட்சி ஒளிபரப்பியது. நவீன தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்ட வீடியோ காட்சியை காட்டி பணம் கேட்டு மிரட்டுவதாக, நித்யானந்தா தியான பீட நிர்வாகி சென்னை காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் லெனின், ஐயப்பன், ஆர்த்தி ராவ் உள்பட பலர் மீது சி.பி.சி.ஐ.டி. பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை மறு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரியும், ‘ஆர்த்திராவ், பரத்வாஜ் இடையே நடந்த இ-மெயில் உரையாடலையும், கர்நாடக மாநில அமர்வு நீதிமன்றத்தில் உள்ள மார்பிங் வீடியோ கேசட் குறித்தும்மீண்டும் விசாரிக்க கோரியும் நடிகை ரஞ்சிதா மேனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரஞ்சிதா தரப்பில் இந்த வழக்கை நேரடி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து நேரடி விசாரணைக்கு அனுமதித்து, வழகை விசாரணையை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
[2/7, 21:11] Sekarreporter 1: வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் கிளப்களில் நேரடியாக போலீசார் சோதனை நடத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், சட்டப்படி செயல்படும் கிளப்களின் நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது எனவும் போலீசாருக்கு உத்தரவிட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் எம்.எம்.நகர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு விடுதி, சென்னை வடபழனி பைவ் ஸ்டார் கிளப் ஆகியவை தொடர்ந்திருந்த வழக்கில், தங்கள் விடுதிகளின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், கிளப்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தற்கான சாதக – பாதகங்கள் குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, தமிழக டி.ஜி.பி. தாக்கல் செய்த அறிக்கையில், கிளப்களில் சூதாட்டம் நடக்க வாய்ப்புள்ளதால், கழிப்பறைகள் தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இது கிளப் உறுப்பினர்களின் தனிநபர் சுதந்திரத்தை, உரிமையை பாதிக்கும் செயல் என்று கிளப்களின் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தற்போது கிளப்களில் குடும்பத்தினருடன் வந்து நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் போக்கு உள்ளதால், அனைவரையும் கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிப்பில் வைப்பது என்பது தவறானது என்றும், குற்றங்களை கண்டறிவது காவல்துறையினரின் முக்கிய கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக சமுதாயமான இந்திய சமுதாயத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும், சங்கங்களுக்கும் தனிநபர் உரிமை உள்ளது எனச் சுட்டிக்காட்டிய நீதிபதி, தனிநபர் உரிமை என்ற பெயரில் குடிமகனோ, சங்கங்களோ சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

கிளப்களில் சூதாட்டம் நடக்கிறது என்பதை நம்புவதற்கு போதிய காரணங்கள் இல்லாமல் போலீசார், நேரடியாக எந்த சோதனையையும் நடத்த முடியாது எனக் கூறிய நீதிபதி, டி.எஸ்.பி. அல்லது உதவி ஆணையரோ சோதனை உத்தரவை பிறப்பிக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

கிளப்களுக்கு நுழையும் பகுதியிலும், வெளியேறும் பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்களை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, 30 நாட்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை சம்பந்தப்பட்ட போலீசார் கேட்கும் போது வழங்க வேண்டும் எனவும், கிளப்களுக்கு உத்தரவிட்டார்.

கிளப் வளாகத்தில் சூதாட்டம் போன்ற விளையாட்டுக்களுக்கு அனுமதி வழங்க கூடாது எனவும், மீறி சூதாட்டம் நடத்தப்படுவதை கண்டறிந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை எடுக்கலாம் எனவும், உரிய உத்தரவுகள் இல்லாமல் எந்த போலீசாரும், சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்த முடியாது என்றும் தெரிவித்த நீதிபதி, தேவையில்லாமல் கிளப்களுக்குள் போலீசார் நுழைய கூடாது என்றும் உத்தரவிட்டார்.

அதேபோல, விசாரணைக்கு தேவைப்படும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை மட்டுமே போலீசார் பெற வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடும் கிளப்களில் தலையிடக் கூடாது என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

You may also like...