Madras high court orders december 11

[12/11, 10:07] Sekarreporter 1: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதுவை மாநில தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

புதுவை மாநில அரசு நிறுவனமான பாசிக்கில்( குடிநீர் வினியோகம் மற்றும் காய்கறிகள் விற்பனை நிறுவனம்) சம்பளம் பாக்கி தொடர்பாக 48 ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மூன்று மாதங்களுக்குள் பாசிக் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கடந்த ஆண்டு ஜூலை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சம்பளம் வழங்காததால், ஊழியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் புதுவை தலைமை செயலாளர் அஸ்வினி குமார், வேளாண் துறை செயலாளர் ரவி பிரகாஷ், இயக்குனர் பாலகாந்தி ஆகியோர் நேற்று ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து தலைமை செயலாளர் அஸ்வினி குமார் தவிர மற்றவர்கள் ஆஜர் ஆனார்கள்.

இதனை தொடர்ந்து தலைமை செயலாளர் அஸ்வினி குமார், துறை செயலாளர் ரவி பிரகாஷ் ஆகியோர் நேரில் ஆஜராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து, நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டுள்ளார்..
[12/11, 12:03] Sekarreporter 1: சிறையில் கைதி மரணமடைந்த வழக்கில், ஓய்வு பெற இருந்த நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏட்டுவுக்கு எதிரான துறைரீதியான விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தில், கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் என்பவர், சிறையில் அடைக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பின், மரணமடைந்ததை அடுத்து, அவரை கைது செய்த மல்லியக்கரை காவல்நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர், ஏட்டு சத்தியமூர்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், பணி ஓய்வு பெற இருந்த 2017 ஜூன் 30ம் தேதி தன்னை சஸ்பெண்ட் செய்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஏட்டு சத்தியமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கைதி முருகனின் மரணம் இயற்கைக்கு முரணானது அல்ல என ஆத்தூர் நீதித்துறை நடுவர், சேலம் காவல் உதவி ஆணையர், மருத்துவர்களின் அறிக்கை அளித்துள்ளதால், தனக்கு எதிரான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.டி.அருணன் ஆஜராகி வாதிட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், 2017 ம் ஆண்டு துவங்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

நீதித்துறை நடுவரின் அறிக்கையை ஏற்று, நடவடிக்கையை கைவிடுவதாக முடிவுக்கு வந்தால், மனுதாரருக்கு பென்ஷன் வழங்குவதற்கான நடவடிக்கையை துவங்க வேண்டும் எனவும், துறைரீதியான நடவடிக்கையை தொடர்வதாக இருந்தால் ஆறு மாதங்களில் அதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும்
குற்ற வழக்கில் மனுதாரர் தண்டிக்கப்பட்டால், பென்ஷனை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டார்.
[12/11, 12:36] Sekarreporter 1: தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் செயற்கை தடகள ஓடுதளம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள நிபுணர் குழுவை அமைக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் எட்டு வழி செயற்கை தடகள ஓடுதளம் அமைக்க, மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம், 8 கோடியே 30 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது. இந்த செயற்கை தடகள ஓடுதளத்தை அமைப்பதற்கு இந்திய தடகள கூட்டமைப்பு, சர்வதேச தேர்வில் தேர்ச்சி பெற்ற சர்வதேச தடகள வீரர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைக்கக் கோரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வு பெற்ற மண்டல மூத்த மேலாளர் மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், செயற்கை தடகள ஓடுதளத்தில் பல்வேறு வரையறைகள் உள்ளதாகவும், அதை பூர்த்தி செய்ய நிபுணர் குழு அமைப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இப்பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அமைத்துள்ள நிபுணர் குழு என்பது தகுதியானதாக இல்லை எனவும், வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அதனால், சர்வதேச தேர்வில் தேர்ச்சி பெற்ற தடகள வீரர்கள், இந்திய தடகள கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, பணிகளை மேற்பார்வையிட உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.சிவராமன் ஆஜராகி வாதிட்ட இந்த வழக்கை விசாரித்த பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு தமிழ்நாடு மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
[12/11, 12:37] Sekarreporter 1: புதுச்சேரி துத்திப்பட்டு கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள புதுச்சேரி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட்டிகள் நடத்த தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சியாச்சின் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம், நீர்நிலைகளையும், அரசு புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து, அதில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டியுள்ளதாகக் கூறி, புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த சந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அரசு புறம்போக்கு நிலம், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக பல்வேறு கிராம மக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் ஆய்வு நடத்திய புதுவை நகரமைப்புத் துறை செயலாளர் அளித்த அறிக்கையில் ஸ்டேடியம் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கான மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளை துண்டிக்கவும், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கவும் பரிந்துரைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அரசு இடத்தில் இருந்து வெளியேறும்படி சியாச்சின் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அந்த உத்தரவை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும், ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜா மற்றும் பரத் சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய அரசு, புதுச்சேரி அரசு, சியாச்செம் நிறுவனம் ஆகியவற்றிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
[12/11, 14:09] Sekarreporter 1: சேலம் பெரியார் பல்கலைகழகம் 5 கோடி ரூபாய் அளவிற்கு வரி செலுத்த வேண்டுமென சேலம் ஜி.எஸ்.டி. ஆணையர் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

சேலம், பெரியார் பல்கலைக்கழகம், 2012 முதல் 2017 ம் ஆண்டு வரை வசூலித்த கல்லூரிகள் இணைப்புக்கான ஆய்வுக் கட்டணம், புதிய படிப்புக்களுக்கான கட்டணம், கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான கட்டணங்களுக்கான சேவை வரி, வட்டி, அபராதம் என, 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலுத்தும்படி, கடந்த மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும், பெரியார் பல்கலைகழகம் சார்பில் அதன் பொறுப்பு பதிவாளரான கே.தங்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், 2017 ம் ஆண்டு ஜி.எஸ்.டி வரி ஆணையர் அனுப்பிய நோட்டீஸ்களுக்கு போதிய விளக்கங்கள் அளித்த நிலையில், திடீரென வரி செலுத்தும்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி வழங்கும் பல்கலைக்கழகம் சேவை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2017 ம் ஆண்டு ஜி.எஸ்.டி., வரி அமலுக்கு வந்த பின், முறையாக ஜி.எஸ்.டி. வரி செலுத்தி வருவதாகவும், தற்போது பெருந்தொகையை வரியாக செலுத்தினால் அது பல்கலைகழகத்துக்கு நிதிச்சுமை ஏற்படுத்தும் எனவும், மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பெரியார் பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், அரசின் பல்கலைகழகம் மூலம் அதன் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்குவதற்கு சேவை வரி வசூலிக்க முடியாது என வாதிட்டார்.

இதையடுத்து, சேவை வரி செலுத்தும்படி ஜி.எஸ்.டி ஆணையர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
[12/11, 15:59] Sekarreporter 1: மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கியதை எதிர்த்து நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் பைனான்சியர் உத்தம்சந்த்
மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் சிம்பு நடித்த மாநாடு படத்தின் சாட்டிலைட் வெளியீட்டு உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு விற்றதை எதிர்த்து நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சென்னை 20வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில் படம் திட்டமிட்டபடி வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்த நிலையில், கொட்டும் மழையிலும் இரவுபகல் பாராமல் தானும், மனைவியும் படத்தை வெளியிட பெருமுயற்சி எடுத்ததாகவும், பைனான்சியர் உத்தம்சந்திடம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார்பாக 5 கோடி ரூபாயை தானும், தன் மனைவியும் உத்தரவாதம் செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தங்களிடம் தெரிவிக்காமலேயே படத்தில் சாட்டிலைட் உரிமை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தனக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்கும்வரை சாட்டிலைட் உரிமைக்கு தடைவிதிக்கவும், பணத்தை தர உத்தரம்சந்த், சுரேஷ் காமாட்சி ஆகியோருக்கு உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஜீவபாண்டியன் , வழக்கு குறித்து பைனான்சியர் உத்தம்சந்த், தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[12/11, 16:00] Sekarreporter 1: ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் எட்டு ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை மாற்றி விட்டு புதிய வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சிக்கு பயன்படுத்தும் இலகு ரக வாகனங்களை எட்டு ஆண்டுகளுக்கு பிறகும், கனரக வாகனங்களை 10 ஆண்டுகளுக்குப் பிறகும் மாற்றி விட்டு புதிய வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என, 2011ம் ஆண்டு தமிழக போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை பிறப்பித்தது.

இந்த சுற்றறிக்கை கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் முதல் அமலுக்கு வந்த நிலையில், 2020ம் ஆண்டு முதல் புதிய வாகனங்களை பயிற்சிக்கு பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இதை எதிர்த்து தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொரோனா பேரிடர் காரணமாக ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டதாகவும், இந்த காலகட்டத்தில் வாகனங்கள் பயிற்சிக்கு பயன்படுத்தப்படாததால், புதிய வாகனங்களை பயன்படுத்தும்படி வற்புறுத்தக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மோட்டார் வாகன சட்டப்படி, வாகனங்களுக்கு வழங்கப்படும் பதிவுச் சான்றிதழ்கள் 15 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும், கொரோனா காரணமாக வாகனங்கள் பயிற்சிக்கு பயன்படுத்தவில்லை என்றும் கூறி, பயிற்சிக்கு புதிய வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு நான்கு வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 7 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[12/11, 19:54] Sekarreporter 1: தமிழகம் முழுவதும் இன்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் 388 கோடியே 30 லட்சத்து 50 அயிரத்து 722 ரூபாய் மதிப்பிலான 57,723 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளன.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் இன்று தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 அமர்வுகளும், மதுரை கிளையில் இரு அமர்வுகளும் வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதேபோல மாவட்ட மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள் மூலம், மாநிலம் முழுவதும் 417 அமர்வுகள் மொத்தம் ஒரு லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேலான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 49 ஆயிரத்து 586 வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத 8 ஆயிரத்து 137 வழக்குகள் என மொத்தம் 57,723 வழக்குகள், 388 கோடியே 30 லட்சத்து 50 அயிரத்து 722 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டதாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில், இன்றைய லோக் அதாலத்தில், 45 கோடியே 40 லட்சத்து55 ஆயிரத்து 328 ரூபாய் மதிப்பிலான 1,772 செக் மோசடி வழக்குகளும், 153 கோடியே 28 லட்சத்து 11 ஆயிரத்து 323 ரூபாய் மதிப்பிலான3,304 மோட்டார் வாகன விபத்து வழக்குகளிலும் தீர்வு காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல, 44 கோடியே 93 லட்சத்து ஆயிரத்து 454 ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரத்து 334 சிவில் வழக்குகளும், 133 திருமணம் சம்பந்தப்பட்ட வழக்குகளும் இன்றைய லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

You may also like...