Cj speech –நீதிமன்றங்களில் இன்னும் காலனித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ முறையை குறிக்கும் “லார்ட்ஷிப்” என நீதிபதிகளை அழைக்கும் நடைமுறை கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்திய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, மரியாதை நிமித்தமாக அழைக்கக்கூடிய “சார்” என்று சொன்னாலே போதும் என தன் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வளர்ச்சிக்காக வேளாண் நிலங்களை அழிப்பது மக்களுக்கு உணவு கிடைப்பதை பறிக்கும் செயல் என்றும், இயற்கையோடு இணைந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்புவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி மூலம் சென்னையிலிருந்து தலைமை நீதிபதி நீதிமன்றத்தை திறந்து வைத்தார்.

இந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், என்.ஆனந்த் வெங்கடேஷ், பி.புகழேந்தி, மாவட்ட முதன்மை நீதிபதி முத்து சாரதா உள்ளிட்ட நீதித்துறையை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

திருச்சுழி நீதிமன்ற விழாவில் பேசிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நாட்டின் தற்போதைய வளர்ச்சி விகிதத்திற்காக விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது என்றும், அப்படி செய்தால் மக்களின் உணவை பறிக்கும் செயலாக அமைந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.

நிலம் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து ஏராளமான பொது நல வழக்குகள் வருவதாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி, நிலம் ஒரு பற்றாக்குறையான பொருளாக மாறிவருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், சமீபகாலங்களில் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட வன நிலங்களை திரும்ப ஒப்படைத்து, வன வழித்தடங்களை மீண்டும் உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அக்கறை தெரிவித்துள்ளார்.

கண்ணுக்கு தெரியாத தீநுண்மி (வைரஸ்) பலரை மரணத்தில் தள்ளியுள்ள நிலையில், நாம் மக்கள் இயற்கையோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். வளர்ச்சி மீது அக்கறை கொள்ளும் அதே நேரத்தில், இயற்கை மற்றும் விலங்குகள் மீதான மாண்பை காண்பித்து, இணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளார்.

நீதிமன்றம் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் மூலம் தீர்வை வழங்கும் நீதிபதிகள், சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உள்ள அதிகாரம் மற்றும சட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.

நீதிமன்றத்தை திறந்து வைப்பது குறித்து பெருமை தெரிவிக்கும் அதேவேளையில், சாமானியர்களுக்கு கட்டுமானங்கள் மட்டும் நீதியை வழங்காது என்றும், நீதியை நாடுபவர்களுக்கு உகந்ததாகவும், நபர்கள் அதை அணுகுவதற்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்றும், நீதிபதிகளின் அணுகுமுறையும் மாற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

நீதிமன்றங்களில் இன்னும் காலனித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ முறையை குறிக்கும் “லார்ட்ஷிப்” என நீதிபதிகளை அழைக்கும் நடைமுறை கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்திய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, மரியாதை நிமித்தமாக அழைக்கக்கூடிய “சார்” என்று சொன்னாலே போதும் என தன் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

You may also like...