Madras highcourt orders sep 27

[9/27, 12:19] Sekarreporter.: மரக்காணம் கலவரத்தில் பொது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேததிற்கான இழப்பீட்டை வசூலிப்பது குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி பா.ம.க.வுக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

மாமல்லபுரத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டது. அப்போது, மரக்காணம் அருகே கட்டையன் தெரு காலனி பேருந்து நிறுத்தத்தில் கலவரம் ஏற்பட்டு, அரசியல் தலைவர்கள் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த கலவரத்தின் போது பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து.2013ம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

இதனால், 2013 ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்ட இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணிக்கு வருவாய் நிர்வாக ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில், பாமகவினர் விடுதலை செய்யப்பட்டதாகவும், அரசு அனுப்பிய நோட்டீசில், போக்குவரத்து இயங்காததால் ஏற்பட்ட இழப்பை வசூல் செய்வது தொடர்பாக, அரசியல் உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளாதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை தரப்பில், மொத்தம், 58 பேருந்துகள் சேதம் அடைந்ததாகவும், பல கோடிகள் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், தமிழ்நாடு பொது சொத்து சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டப்படி, பொது சொத்துக்களை சேதம் ஏற்படுத்தினால் மட்டுமில்லாமல், நிதி இழப்பு ஏற்படுத்தினாலும், சம்பந்தப்பட்டவர்களிடம் இழப்பீடு வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த கலவர வழக்கில் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், அரசுக்கு ஏற்படுத்திய இழப்பீடு வசூலிக்க எந்தவித தடையும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, கலவரத்தின் போது பல அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், டாஸ்மாக் கடைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்திய பிறகு, இழப்பீடு நிர்ணயிக்கப்படும் என்பதால், அரசு நோட்டீசுக்கு பாமக தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, நோட்டீசை ரத்து செய்ய மறுத்து விட்டார்.

கலவரம் தொடர்பாக போக்குவரத்து துறை அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கமளிக்குமாறு பாமகவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த விசாரணையை 4 மாதத்தில் அர்சு முடிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகள் தங்கள் கடமைகளை மறந்ததால்தான், இதுபோன்று அரசியல் சாசனத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்த நீதிபதி, கட்சித் தலைவர்கள் சமூகத்தின் மீதான கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் போராட்டங்களில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம், 1992ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போதும், கடந்த 29 ஆண்டுகளாக இந்த சட்டம் திறமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும், இந்த சட்டத்தின் அடிப்படையில் எத்தனை பேரிடம் இழப்பீடுகள் வசூலிக்கப்பட்டது என்பது தெரியவில்லை என கூறிய நீதிபதி, இனி வரும் காலங்களில் இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வெண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வருவாய் நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க எனவும் தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்தாமல் இருக்க காரணம், பொதுச்சொத்தை சேதப்படுத்தியவர்கள் மத்தியிலும் – மாநிலத்திலும் ஆட்சியிலிருக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது கூட காரணமாக இருக்கலாம் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்

ஆளும் கட்சியினரே இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் கூட அரசு அதிகாரிகள் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
[9/27, 15:07] Sekarreporter.: *சென்னை உய‌ர்நீதி மன்றம்
ஆவின் நுழைவு வாயில் வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது*

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவு வாயில் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம் மேற்கொண்டனர்.

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 300 நாட்களுக்கு மேலாக விவசாய்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக இன்று பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் நாடு  தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

இதற்கு ஆதரவளிக்கும் விதமாக சென்னை உயர்நீதி மன்ற ஆவின் நுழைவு வாயில் முன்பு அகில இந்திய வழக்கறிஞர் சங்கம், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களை சார்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன..

மேலும் ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பில்
சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்றும் தமிழகம்தில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கபட வேண்டும் என்றும் தமிழகத்தில் அனைத்து நீதி மன்றகளிலும் உரிய பாதுகாப்பு உடன் நேரடி விசாரணை துவங்க வேண்டும் என்றும்
மூன்று அம்ச கோரிக்கைகளை வ‌லியுறு‌த்‌தியும் ஆர்பாட்டம் நடை பெற்றது.
[9/27, 16:52] Sekarreporter.: இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் நடமாட்டத்தை  கண்காணிக்க மாவட்ட அளவில் தனிப் பிரிவை ஏற்படுத்த தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழில், வேலைவாய்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட  காரணங்களுக்காக இந்தியா வரும் இலங்கை, நைஜீரியா, சீனா, ஈரான், பங்களாதேஷ் உள்ளிட்ட வெளிநாடுகளைச்  சேர்ந்த பலர், விசா காலம் முடிந்தும் இந்தியாவிலேயே தங்கியிருந்து  குற்றச்செயல்களில்  ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இதுபோன்ற வழக்கில் தொடர்புடைய சுரேஷ் ராஜ் உள்ளிட்ட பல வெளி நாட்டினர், ஜாமீன் கோரியும், முன் ஜாமீன் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் மட்டும் 13 ஆயிரத்து 289 பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக டிஜிபி அறிக்கை தாக்கல் செய்திருந்தார். 

 இதை பதிவு செய்த நீதிபதி தண்டபாணி, வெளிநாட்டவர்கள் இந்தியா வரும்போது, அவர்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கும் அவருடைய வருகை மற்றும் புறப்பாடு உள்ளிட்டவைகளை  கண்காணிக்க குடியுரிமை அதிகாரிகள் இருப்பதாகவும் மேலும் வெளிநாட்டவர்களின் வருகையை பதிவு செய்ய பதிவு அலுவலகங்களும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பல வெளிநாட்டினர், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி குற்றச் செயல்களில்  ஈடுபடுவதாகவும்,  இது நாட்டின் பாதுகாப்புக்குகு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், இதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

விசா காலம் முடிந்த வெளிநாட்டினரை உடனடியாக அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க  மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளதாகவும், அவற்றை மாநில அரசுகள் பின்பற்றி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.

 குற்ற வழக்கில்
தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளவர்களை, தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகு, உடனடியாக அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசா காலம் முடிவடைந்து தங்கியிருக்கும் பலர் போலி ஆவணங்கள் மூலமாக இந்தியஅடையாள அட்டைகளை பெற்றுள்ளதாகவும் வேதனை   தெரிவித்த நீதிபதி வெளிநாட்டவர்களை கண்காணிப்பதற்கு மாவட்ட அளவில் தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா வரும் வெளிநாட்டினரின்  பாஸ்போர்ட்  விசா உள்ளிட்ட தகவல்களை பதிவு அலுவலகங்கள், மாநில காவல் துறைக்கு வழங்க வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் விசா காலம் முடிவடைந்து சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

  சிறைகளில் உள்ள வெளிநாட்டினர் அவர்கள் தங்களுடைய தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகு அவர்களை  சொந்த நாடுகளுக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி ,
இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

  பல கொடுங்குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனக் கூறி, அனைத்து ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[9/27, 16:55] Sekarreporter.: உள்ளாட்சி தேர்தலில் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்கக் கோரி புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஒன்பது மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், தங்களுக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க கோரி புதிய தமிழகம் கட்சி சார்பில், மாநில தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.
ஆனால், புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கையை நிராகரித்து செப்டம்பர் 17ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, உள்ளாட்சி தேர்தலில் தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வி.கே.அய்யர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி சின்னம் ஒதுக்க மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்து பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி துரைசுவாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விளக்கத்தை ஆய்வு செய்ய மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணை செப்டம்பர் 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது
[9/27, 17:18] Sekarreporter.: 34 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த அரசு ஊழியரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருவாய் துறையில் பணியாற்றி வந்த தனது கணவர், 1988ம் ஆண்டு சாலை விபத்தில் பலியானதாக கூறி, கருணை அடிப்படையில் தனக்கு அரசு வேலை வழங்க கோரி, ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ரோசா என்பவர் அரசுக்கு விண்ணப்பித்தார்.

அதே நேரத்தில் மற்றொரு பெண், அரசு ஊழியரின் மனைவி என கூறி கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரியதால், சட்டப்பூர்வ மனைவி யார் என நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வர அரசு அறிவுறுத்தியது.

இதன்படி, ரோசா, தன்னை சட்டபூர்வ மனைவி என அறிவிக்கக்கோரி 2011ம் ஆண்டு ஜெயங்கொண்டம் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ரோசாவிற்கு ஆதரவாக 2013ம் ஆண்டும் தீர்ப்பு வந்தது.

இதையடுத்து, தன் மகன் பிரபாகரனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால், 30 ஆண்டுகளுக்கு பின் விண்ணப்பித்துள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ரோசா மற்றும் பிரபாகரன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் மற்றும் நீதிபதி நக்கீரன் அமர்வு, இத்தனை ஆண்டுகள் தாமததிற்கு மனுதாரரையோ அல்லது அரசையோ குறைக்கூற முடியாது என்றும், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததே இந்த தாமதத்திற்கு காரணம் என்றும், அதனால் பிராபகரனுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும், பிரபாகரனுக்கு தகுதிக்கேற்ப 3 மாதத்தில் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் இந்த உத்தரவு என்பது ஒரு முன்மாதிரியாக கருதக்கூடாது ஏனெனில் இந்த உத்தரவு இவருக்கு மட்டும் தான் பொருந்தும் என்று தெரிவித்தனர்.
[9/27, 18:12] Sekarreporter.: விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக இயக்குனர் சந்திரசேகர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில்மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அமைப்பை பதிவு செய்தார்.

தலைவராக இயக்குனர் சந்திரசேகர், பொருளாளர் ஷோபா உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களை பயன்படுத்தவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை நகர 5வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நடிகர் சி. ஜோசப் விஜய் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக எஸ் ஏ சந்திரசேகர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், 2021 பிப்ரவரி 28ம் தேதி விஜய் மக்கள் மன்றத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாகவும், அந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் சேகர், ஜெகன், பாரதிதாசன், ஷோபா, மகேஸ்வரன் உள்ளிட்டோர் தங்களது பொறுப்புகளிலிருந்து அடிப்படை உறுப்பினர்களில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

மேலும், அன்றைய கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், த்ற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பே இல்லை எனவும், விஜய் ரசிகர்களாக மட்டுமே தொடர்வதாகவும் அதில் கூறியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் எதிர்மனுதாரரான மகேஸ்வரன் தரப்புக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணை அக்டோபர் 29ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

You may also like...