தனியார் பள்ளிகள் சங்க செயற்குழு கூட்டம் அதன் தலைவர் பி.டி.அரசகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர்கள் கே.ஆர்.நந்தகுமார், டி.சி.இளங்கோவன், பொருளாளர் ஜி.ஆர்.ஸ்ரீதர், ஒருங்கிணைப்பாளர் எம்.ஆறுமுகம், சட்ட செயலாளர் மனோகரன் ஜெயக்குமார், கொள்கை பரப்பு செயலாளர் எம்.டி.இன்ஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க செயற்குழு கூட்டம் அதன் தலைவர் பி.டி.அரசகுமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில பொதுச்செயலாளர்கள் கே.ஆர்.நந்தகுமார், டி.சி.இளங்கோவன், பொருளாளர் ஜி.ஆர்.ஸ்ரீதர், ஒருங்கிணைப்பாளர் எம்.ஆறுமுகம், சட்ட செயலாளர் மனோகரன் ஜெயக்குமார், கொள்கை பரப்பு செயலாளர் எம்.டி.இன்ஸ்டின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
சமீபகாலமாக தனியார் பள்ளிகளை சமூக விரோதிகள் தாக்கி சொத்துக்களை சேதப்படுத்துவது, ஆசிரியர் – ஆசிரியைகளை மாணவர்களும், பெற்றோர்களும் தாக்குவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மருத்துவர்களுக்கும், மருத்துவ மனைகளுக்கும் பாதுகாப்பு சட்டம் இருப்பதை போன்று தனியார் பள்ளிகளுக்கும், அதில் பணிபுரியும் ஆசிரியர் – ஆசிரியைகளுக்கும் பாதுகாப்பு தர ஒரு பாதுகாப்பு சட்டம் தமிழக அரசு இயற்ற வேண்டும்.
தகுதி வாய்ந்த தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் நிலுவையில் உள்ள தொடர் அங்கீகாரத்தை உடனடியாக வழங்க வேண்டும். தற்போது 5-ம் வகுப்புவரை நடைபெற்று வரும் பள்ளிகளை 8-ம் வகுப்பு வரை தரம் உயர்த்தி அனுமதிக்க வேண்டும்.
தனியார் பள்ளி கட்டிடங்களுக்கு நகர் ஊரமைப்பு துறை இயக்குனரிடம் உரிய கட்டணம் செலுத்தி கட்டிட வரைபடம் அனுமதி பெற்ற பிறகும் உள்ளாட்சி அமைப்புகளிடம் மீண்டும் கட்டணம் செலுத்தும் நடைமுறையை ரத்து செய்திட வேண்டும்.
தனியார் பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், முறைப்படுத்துவதற்கும் அரசின் சார்பில் வல்லுனர் குழுவை அமைத்திட வேண்டும். தமிழகத்தில் முறையின்றி நடத்தப்படும் பிளே ஸ்கூல்களை முறைப்படுத்த வேண்டும். பிளே ஸ்கூலுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வழங்கிட வேண்டும்.
அரசு அனுமதியின்றி நீட், ஜே.இ.இ. தேர்வுக்கான பயிற்சி மையங்களை நடத்தி மாணவர்கள், பெற்றோர்களை இன்னல்படுத்துவதை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.