போலி சாதிச் சான்று அளித்து போட்டியிட்ட புழல் பஞ்சாயத்து யூனியன் காங்கிரஸ் கவுன்சிலரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி சாதிச் சான்று அளித்து போட்டியிட்ட புழல் பஞ்சாயத்து யூனியன் காங்கிரஸ் கவுன்சிலரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம், புழல் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகா, போலி சாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டதாக குற்றம் சாட்டி ராஷியா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மல்லிகா, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என போலி ஜாதி சான்றிதழ் அளித்து, பட்டியல் இனத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் ராஷியா தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் சி குமரப்பன் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மல்லிகா, பட்டியல் இனத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டில் போட்டியிட உரிமை இல்லை என்றும் இது சம்பந்தமாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரசு அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வாதிட்டார்.
ஆனால், தனது கணவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் இந்த வார்டில் போட்டியிட்டதாக மல்லிகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், திருமணத்தின் மூலம் ஒருவரின் ஜாதி மாறிவிடாது என்றும் மாறாக அவர்களின் குழந்தைகள் பட்டியல் இனத்தவற்களுக்கான சலுகைகளை பெற உரிமை உள்ளது என்றும் தெரிவித்தனர்.
பின்னர், பட்டியல் இனத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டில் போட்டியிட மல்லிகாவுக்கு தகுதி இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், உடனடியாக அவரை கவுன்சிலர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவருக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.