Cvkj monkey case நீதிபதி சி.வி கார்த்திகேயன், குட்டி குரங்குக்கு என்ன மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும், உயிரிழந்த குரங்கின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ 28ம் தேதி தள்ளிவைத்தார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு பின் உயிரிழந்த குட்டி குரங்கின் மருத்துவ கிசிச்சை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெருநாய்களால் கடிபட்டு தன்னிடம் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி குரங்கை கைபற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவில் வனத்துறை ஒப்படைத்தது. அதனால், கைபற்றப்பட்ட குரங்கை தன்னிடம் மீண்டும் ஒப்படைக்கக்கோரி கால்நடை மருத்துவர் வல்லையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வன விலங்குகளை தனி நபர்கள் வைத்திருக்க உரிமை இல்லை என வழக்கை தள்ளுபடு செய்தது.
இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி குரங்கு நவ 21ம் தேதி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கால்நடை மருத்துவர் வல்லையப்பன் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு, நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு முறையீடு செய்தார்.
அந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குட்டி குரங்குக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் போதுமான சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், ஆனால், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் குரங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் வழக்கறிஞர், கால்நடை மருத்துவரால் பராமரிக்கப்பட்ட குரங்கு நல்ல
ஆரோக்கியத்துடன் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 2023 முதல் 2024 அக்டோபர் மாதம் வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த குரங்கு அக்டோபர் 26ம் தேதி வனத்துறையிடம் ஒப்படைக்கும் வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது. அதனால், சந்தேகமான முறையில் உயிரிழந்த குரங்கின் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உடல்நிலை சரியாகி 100 கிராம் எடை அதிகிரித்திருந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், குட்டி குரங்குக்கு என்ன மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும், உயிரிழந்த குரங்கின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவ 28ம் தேதி தள்ளிவைத்தார்.