நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோரிடம், சிவாவின் வக்கீல் எம்.புருஷோத்தமன் நேற்று முறையிட்டார். இதுகுறித்து அவசர வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நீதிபதிகள் நேற்று மாலை 5 மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்தனர். அப்போது வக்கீல் புருஷோத்தமன் ஆஜராகி, மண் லாரி கவிழ்ந்து கிடப்பது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் கங்கேஸ்வரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசு ஆகியோருக்கு மனுதாரர் சிவா தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் அங்கேயே
சென்னை, நவ.21-
கோவை பேரூர் தாலுகாவில் உள்ள கோட்டைக்காடு சட்டவிரோதமாக மண் எடுப்பதாகவும், இதை தடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், எம்.சிவா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் இந்த பகுதியில் மண் எடுக்க தடை விதித்தனர்.
மேலும், கோவை மாவட்ட நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதன்படி, மாவட்ட நீதிபதி இந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்தநிலையில், தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து மண் எடுத்து வந்த லாரி கவிழ்ந்து விட்டதாக மனுதாரர் சிவா உள்ளிட்டோருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சிவா உள்ளிட்டோர் சென்றனர். அப்போது அங்கிருந்த கும்பல், சிவாவை ஒரு கும்பல் அடித்து உதைத்துள்ளது.
இதுகுறித்து நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோரிடம், சிவாவின் வக்கீல் எம்.புருஷோத்தமன் நேற்று முறையிட்டார். இதுகுறித்து அவசர வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நீதிபதிகள் நேற்று மாலை 5 மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்தனர்.
அப்போது வக்கீல் புருஷோத்தமன் ஆஜராகி, மண் லாரி கவிழ்ந்து கிடப்பது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் கங்கேஸ்வரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசு ஆகியோருக்கு மனுதாரர் சிவா தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் அங்கேயே இருங்கள் 2 நிமிடத்தில் வந்து விடுகிறோம் என்று அங்கேயே இருக்கும்படி கூறியுள்ளனர். அப்போது அங்கு வந்த மணல் கடத்தல் கும்பல் சுமார் 40 பேர், சிவாவை பக்கத்தில் உள்ள தோப்புக்குள் தூக்கிச் சென்று மயங்கி விழும் அளவுக்கு கொடூரமாக அடித்து உதைத்துள்ளனர். காலதாமதமாக வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும், அந்த கும்பலை பிடிக்காமல், கலைந்து செல்லும்படி கூறியுள்ளார். சட்டப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
காலதாமதமாக அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். இந்த 2 அதிகாரிகளை விட கனிம வளம் உதவி இயக்குனர் ஒரு படி மேல் சென்று, கவிழ்ந்து விழுந்த லாரி பெர்மிட் அடிப்படையில் மண் எடுத்து வந்ததாக கூறியுள்ளார். அதுவும், 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வழுக்குப்பாறை என்ற இடத்தில் இருந்து ஈஷா அறக்கட்டளைக்கு மண் எடுத்துச் செல்லப்படுவதாக கூறியுள்ளார். மொத்தத்தில் அதிகாரிகளால், இந்த வழக்கை தாக்கல் செய்தவர் சட்டவிரோத கும்பல் கையில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்’’ என்று கூறினார்.
உடனே நீதிபதிகள், அந்த பகுதியில் மண் எடுக்கக்கூடாது என்று ஏற்கனவே தடை உத்தரவை பிறப்பித்துள்ளோம். அப்புறம் எப்படி வழுக்குப்பாறையில் மண் எடுக்க பெர்மிட் வழங்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பினர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, மனுதாரர் தரப்பில் கூறப்படும் தீவிர குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வருகிற 26-ந்தேதி பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைக்கிறோம். அதேநேரம், மனுதாரர் சிவாவுக்கு தேவையான சிகிச்சையை வழங்கும்படி கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி டீனுக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.