Sudagar spp filed chargesheet
அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியனுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
சென்னை தியாகராயநகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான பால வெங்கட சுப்பிரமணியன் என்ற ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா. செல்வம் புகாரளித்தார்.
இதனடிப்படையில் மணியன் மீது, வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர், கைது செய்த நிலையில் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.
இந்த வழக்கில், சுமார் 200 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகை கடந்த அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பில் 15 சாட்சிகள், 34 ஆவணங்கள் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானா ஆர்.பி.வி.எஸ். மணியனிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, வழக்கை டிசம்பர் 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.