வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்த அவதூறு கருத்துக்களை வெ

கண்ணகி – முருகேசன் ஆணவ கொலை வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்த அவதூறு கருத்துக்களை வெளியிட பாஜகவை சேர்ந்த தடா பெரியசாமி, முருகேசன் தந்தை சாமிக்கண்ணு, வழக்கறிஞர் பி.ரத்தினம் உள்ளிட்டோருக்கு சென்னை நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக தொல். திருமாவளவன் தொடர்ந்துள்ள வழக்கில் கடந்த 2003ஆம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் ஆகியோர் கொடுரமாக கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் கடலூர் நீதிமன்றம் 13 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பு குறித்தும், தன்னை பற்றியும் திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த தடா டி. பெரியசாமி, முருகேசனின் தந்தை சாமிக்கண்ணு, அவரது வழக்கறிஞர் பி.ரத்தினம் ஆகியோர் அளித்த பேட்டிகள் மண்ணுரிமை மீட்பு இயக்கம் என்ற முகநூல், ஆதவன் தீட்சன்யாவின் தந்துகி என்ற ப்ளாக்ஸ்பாட், ஜூனியர் விகடன் இதழ் ஆகியவற்றில் வெளியாகி தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். தன்னை பற்றிய குற்றச்சாட்டுகளின் உணமைத்தன்மையை முழுமையாக விசாரிக்காமல், கடந்த காலங்களில் பதிவான அவதூறு தகவல்களை, மீண்டும் தற்போது உள்நோக்கத்துடன் பிளாக்ஸ்பாட்டில் மறுபதிவு செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே தன்னை பற்றிய அவதூறு பரப்பியதற்காக ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டுமெனவும், தனக்கு எதிரான உண்மைக்குபுறம்பான கருத்துக்களை பதிவுசெய்ய 8 எதிர் மனுதாரர்களுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், அவற்றை வெளியிட பேஸ்புக் மற்றும் யூடியூப் தளங்களுக்கு தடைவிதிக்க வேண்டுமெனவும் திருமாவளவன் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, திருமாவளவன் பற்றிய அவதூறு கருத்துக்களை எதிர்மனுதாரர்கள் வெளியிட தடை விதித்ததுடன், வழக்கு குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

You may also like...