முழுமையாக கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் “கட்டண பாக்கி உள்ளது” என குறிப்பட தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முழுமையாக கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் “கட்டண பாக்கி உள்ளது” என குறிப்பட தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பேரிடர் காரணமாக வேலையிழந்த பலர் தங்களின் பிள்ளைகளை கட்டணம் குறைவான தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர், மாற்றுச் சான்றிதழ் கோரும் போது, கட்டண பிரச்னை உள்ளிட்ட காரணங்களைக் கூறி, மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது.

அதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கட்டணம் செலுத்த இயலவில்லை, மாற்றுச் சான்றிதழ் கிடைக்கவில்லை போன்ற காரணங்களுக்காக ஒருவரின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என தெரிவித்து, மாற்றுச் சான்றிதழை மாணவர்களுக்கு வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அகில இந்திய மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் சங்கங்கள் தொடர்ந்த வழக்கில், மாணவர்களின் முழுமையான கல்விக் கட்டணத்தை நம்பியே தனியார் கல்வி நிறுவனங்களின் அனைத்து செலவினங்களும் உள்ளதாகவும், அவற்றை முழுமையாக வழங்காவிட்டால் தங்கள் நலன் பாதிக்கப்படும் என தெரிவிக்கபட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சங்கங்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்டணத்தை முழுமையாக வசூலிக்காமல் மாற்றுச் சான்று வழங்கிவிட்டால், மீண்டும் வசூலிப்பது இயலாத நிலைக்கு உள்ளாவோம் என்பதால், கட்டண நிலுவையை குறிப்பிடும் வகையில் நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.செல்வேந்திரன், ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் மேற்கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்க தேவையில்லை என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், முழுமையாக கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு உரிய மாற்றுச் சான்றிதழை வழங்க வேண்டுமெனவும், கட்டண பாக்கி உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றுகளில் “கட்டண பாக்கி உள்ளது” என் குறிப்பிடலாம் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாணவர்களுக்கான இ.எம்.ஐ.எஸ். இணையத்தில் உரிய திருத்தங்களை 2 வாரத்தில் மேற்கொள்ள வேண்டுமெனவும் உத்தரவிட்டு, பள்ளிகளின் சங்கங்கள் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்துள்ளார்.

You may also like...