நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, குழந்தையை பார்க்க வரும் துணையை தவறாக நடத்துவதாகவும், முறையாக ஒத்துழைப்பதில்லை என்றும் கூறி காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தங்களை கணவன் – மனைவியாக கருதாமால், விருந்தினர்களாக பழகி, ஆரோக்கியமான சூழலை உருவாக்கி குழந்தையின் நேரத்தை மகிழ்வானதாக மாற்ற வேண்டும் என பிரிந்து வாழும் தம்பதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

விவாகரத்து மூலம் பிரிந்த கணவன் – மனைவிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பது குறித்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, குழந்தையை பார்க்க வரும் துணையை தவறாக நடத்துவதாகவும், முறையாக ஒத்துழைப்பதில்லை என்றும் கூறி காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தனிபட்ட இருவரின் புனிதமான சங்கமம் தான் திருமணம் என்றும், அதன் பலனாக கிடைக்கும் குழந்தையை வளர்ப்பது, பெற்றோர் ஆகிய இருவரின் கடமை எனவும் குறிப்பிட்ட நீதிபதி,
பிரிவு என்கிற துரதிர்ஷ்டத்தால் கணவன் மனைவிக்கு பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும், குழந்தைகள் அதன் பாதிப்பை உணர்வதுடன், மன வலியை அனுபவிப்பதாக கவலை தெரிவித்துள்ளார்.

பிரிந்த தம்பதியர், பரஸ்பரம் மரியாதையுடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றாலும், குழந்தைகள் முன் மனிதநேயத்துடனும் நடந்துகொள்வது அவசியம் என வலியுறுத்தி உள்ளார்.

கணவன் மனைவி பிரிந்தாலும், இருவரையும் அணுகவும், அன்பு மற்றும் பாசத்தை பெறவும் குழந்தைகளுக்கு உரிமை உள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதி, சக துணையை புறக்கணிக்கும் நிகழ்வுகளை பார்க்கும் குழந்தைகளும், தங்களை பார்க்க வரும் பெற்றோரை அலட்சியமாக நினைக்கத் தூண்டுவது மனிதாபிமானமற்ற செயலாகும் எனவும், இது குழந்தைகளின் மனதில் விஷத்தை விதைக்கும் செயல் எனவும் எச்சரித்துள்ளார்.

ஒவ்வொரு குழந்தைக்கும், தங்கள் பெற்றோரிடம் இருந்து மிரட்டல் இல்லாத, அன்பான உறவைப் பெற உரிமை உள்ளதாகக் கூறிய நீதிபதி, பெற்றோரில் ஒருவர் இந்த உரிமையை மறுப்பது கூட குழந்தைகளை தவறாக நடத்துவது தான் எனவும் கூறியுள்ளார்.

வெறுப்பு என்பது இயற்கையான உணர்வல்ல; அது கற்பிக்கப்படுகிறது என்றும், வெறுப்பையும், அச்சத்தையும் ஒரு குழந்தைக்கு கற்பிக்கும் போது, அது குழந்தையின் மனநலத்துக்கு ஆபத்தாகி விடும் எனவும் எச்சரித்த நீதிபதி, குழந்தைகள் பாதுகாப்பாக உணரும் வகையில், அவர்கள் முன் பெற்றோர் இருவரும் நட்புடன் நடந்து கொள்வது குழந்தையின் நலனுக்கு முக்கியமானது என அறிவுறுத்தியுள்ளார்.

பிரிந்து வாழும் தம்பதியர், குழந்தையை பார்க்க உள்ள உரிமை குறித்து அக்குழந்தைக்கு விளக்கி, அவர்களுடன் நேரம் செலவிட செய்ய வேண்டும் எனவும், பிரிந்து வாழும் தம்பதியர், தங்களை கணவர் – மனைவியாக கருதாமல், விருந்தினர்களாக கருதி, குழந்தையுடன் சேர்ந்து அவர்களுடன் உணவருந்த வேண்டும் எனவும், அதன் மூலம், ஆரோக்கியமான சூழலை உருவாக்கி குழந்தை பெற்றோருடன் செலவிடும் நேரத்தை மகிழ்வானதாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

You may also like...