நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், தமிழ்நாடு பொது சொத்து சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டப்படி, பொது சொத்துக்களை சேதம் ஏற்படுத்தினால் மட்டுமில்லாமல், நிதி இழப்பு ஏற்படுத்தினாலும், சம்பந்தப்பட்டவர்களிடம் இழப்பீடு வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மரக்காணம் கலவரத்தில் பொது சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேததிற்கான இழப்பீட்டை வசூலிப்பது குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி பா.ம.க.வுக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

மாமல்லபுரத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டது. அப்போது, மரக்காணம் அருகே கட்டையன் தெரு காலனி பேருந்து நிறுத்தத்தில் கலவரம் ஏற்பட்டு, அரசியல் தலைவர்கள் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த கலவரத்தின் போது பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து.2013ம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

இதனால், 2013 ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் போக்குவரத்து கழகத்திற்கு ஏற்பட்ட இழப்பை வசூலிப்பது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணிக்கு வருவாய் நிர்வாக ஆணையர் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜிகே மணி வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில், பாமகவினர் விடுதலை செய்யப்பட்டதாகவும், அரசு அனுப்பிய நோட்டீசில், போக்குவரத்து இயங்காததால் ஏற்பட்ட இழப்பை வசூல் செய்வது தொடர்பாக, அரசியல் உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளாதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை தரப்பில், மொத்தம், 58 பேருந்துகள் சேதம் அடைந்ததாகவும், பல கோடிகள் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், தமிழ்நாடு பொது சொத்து சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டப்படி, பொது சொத்துக்களை சேதம் ஏற்படுத்தினால் மட்டுமில்லாமல், நிதி இழப்பு ஏற்படுத்தினாலும், சம்பந்தப்பட்டவர்களிடம் இழப்பீடு வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த கலவர வழக்கில் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், அரசுக்கு ஏற்படுத்திய இழப்பீடு வசூலிக்க எந்தவித தடையும் இல்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, கலவரத்தின் போது பல அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், டாஸ்மாக் கடைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்திய பிறகு, இழப்பீடு நிர்ணயிக்கப்படும் என்பதால், அரசு நோட்டீசுக்கு பாமக தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, நோட்டீசை ரத்து செய்ய மறுத்து விட்டார்.

கலவரம் தொடர்பாக போக்குவரத்து துறை அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கமளிக்குமாறு பாமகவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த விசாரணையை 4 மாதத்தில் அர்சு முடிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகள் தங்கள் கடமைகளை மறந்ததால்தான், இதுபோன்று அரசியல் சாசனத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்த நீதிபதி, கட்சித் தலைவர்கள் சமூகத்தின் மீதான கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் போராட்டங்களில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டம், 1992ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போதும், கடந்த 29 ஆண்டுகளாக இந்த சட்டம் திறமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும், இந்த சட்டத்தின் அடிப்படையில் எத்தனை பேரிடம் இழப்பீடுகள் வசூலிக்கப்பட்டது என்பது தெரியவில்லை என கூறிய நீதிபதி, இனி வரும் காலங்களில் இந்த சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வெண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல் கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வருவாய் நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க எனவும் தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்தாமல் இருக்க காரணம், பொதுச்சொத்தை சேதப்படுத்தியவர்கள் மத்தியிலும் – மாநிலத்திலும் ஆட்சியிலிருக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது கூட காரணமாக இருக்கலாம் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்

ஆளும் கட்சியினரே இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் கூட அரசு அதிகாரிகள் சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

You may also like...