சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றத்தில் சென்றுள்ள சஞ்ஜி

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றத்தில் சென்றுள்ள சஞ்ஜிப் பானர்ஜிக்கு, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி பி.என்.பிரகாஷ் பிரிவு உபச்சார கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 2020 டிசம்பர் 31வரை தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இருந்தபோது கிரிக்கெட்டில் தோனி தலைமையிலான அணியை பார்ப்பதுபோல இருந்ததாகவும், அதன்பின்னர் வந்த சஞ்ஜிப் பானர்ஜியின் தலைமை விராட் கோலி தலைமையிலான டி.20 போல விறுவிறுப்பாக இருந்த்தாக குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் தலைமை ஏற்பதற்கு முன்பாக ஏ.பி.சாஹி இங்குள்ள சூழலை கற்க தொடங்கியதுபோலவே, சஞ்ஜிப் பானர்ஜியும் கற்றதாக தெரிவித்துள்ளார். நீதி பரிபாலனம், நிர்வாகம் என இரண்டிலும் திறம்பட செயல்பட்டதாகவும், தினமும் காலை 9:15 மணிக்கு நீதிமன்றம் வரும் பழக்கம் உடையவர் என்றும், இரவு 8 மணிக்கு மேலே வீடு திரும்புவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறை நிர்வாகத்தில் திறம்பட செயல்பட்டதால், கோப்புகள் ஏதும் தேக்கம் அடையவில்லை என்றும், அனைத்து மாவட்ட கீழமை நீதிமன்றங்களுக்கும் சாலை மார்க்கமாகவே சென்று, ஒவ்வொரு மாவட்டத்தின் தேவையை புரிந்துகொண்டு சஞ்ஜிப் பானர்ஜி செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி நீதிமன்ற கட்டிடத்திற்கு வாடகை வரவில்லை என தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியிடம் கட்டிட உரிமையாளரான ஒரு பெண் நேரடியாக புகார் அளித்தபோது, தன் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் முக்கிய பிரச்சினை குறித்து கவனம் கொள்ளவில்லையே என தான் வருத்தம் அடைந்ததாக நீதிபதி பி.என்.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற விசாரணை அறையில் பிறப்பிக்கப்படும் உத்தரவாக இருந்தாலும், தீர்ப்புகள் தள்ளிவைக்கப்பட்டு பிறப்பிக்கப்படும் உத்தரவாக இருந்தாலும் சில நாட்களிலேயே கிடைத்துவிடும் வகையில், தன் பணியிடத்தில் கோப்புகள் தேங்காத வண்ணம் சுத்தமாக வைத்திருப்பார் என நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

வழக்கு விசாரணையின்போதும், மற்ற நேரங்களிலும் சஞ்ஜிப் பானர்ஜி முன்வைக்கும் கருத்துகள் அனைத்தும் மெல்லிய இறகு போலத்தான் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஒரு பக்கா பெங்காலி ஜெண்டில்மேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நீதிபதியாக இருந்தபோது மாதமொருமுறை அனைத்து நீதிபதிகள் கூட்டத்தையும், மாதமிருமுறை நிர்வாக குழு கூட்டத்தையும் கூட்டத்தவறாதவர் என்பதையும் நீதிபதி பி.என்.பிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது தெரிந்தபிறகும், தலைமை நீதிபதி என்ற பொறுப்புடன் தனது பணியை ஆர்வமுடன் தொடர்ந்தது தன்னை மிகவும் கவஎந்ததாக கடிததில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள நீதிமன்றங்கள் அனைத்தும் சொந்த கட்டிடத்தில் இயங்க வேண்டுமென்ற நோக்குடன் விசன் ப்ளான் 2025 என்ற திட்டத்தை வகுத்திருப்பதாக நவம்பர் 9ஆம் தேதி தன்னிடம் கூறிய அதேநாளில், அவரது இடமாற்றம் குறித்த அறிவிப்பு பொதுவெளியில் வந்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அடுத்த நாள் பணியாற்றிபோதுகூட எவ்வித சலனமும் இல்லாமல் பணிபுரிந்ததாக நீதிபதி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

அப்படிப்பட்ட ஒரு கர்மயோகிக்கு, சென்னையை போல மேகாலயாவும் சிறப்பானதாக இருக்கும் என்றும், எங்கள் மனதில் எப்போதும் நிலைத்திருப்பீர்கள் என்றும் நீதிபதி பி.என்.பிரகாஷ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

You may also like...