ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்றம், அவ்வாறு அம்பலப்படுத்துவதாக கூறி அத்துமீறினால் அவர்களுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

ஊழலை அம்பலப்படுத்தும் நபர்களை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்றம், அவ்வாறு அம்பலப்படுத்துவதாக கூறி அத்துமீறினால் அவர்களுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கோவில்களின் சொத்துக்களையும், நிலங்களையும் பாதுக்காப்பதாகவும், ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதாகவும் கூறி வழக்கு தொடர்ந்து, அதில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை வைத்துக் கொண்டு, ஆய்வு என்ற பெயரில் கோவில் தொடர்புடைய நடவடிக்கைகளில் தடையிட்டு மிரட்டுவதாகவும், பக்தர்கள் தரிசன நடைமுறைகளில் இடையூறு ஏற்படுத்துவதாக கூறி, சேலம் அல்லிக்குட்டையை சேர்ந்த ஆ. ராதாகிருஷ்ணன் என்பவருக்கு எதிராக சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த கந்தசாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜெ. சத்ய நாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராதாகிருஷ்ணன் ஆஜராகி, கோவில் சொத்துக்களையும், நகைகளையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படுவதால் எதிரிகளை சம்பாதித்துள்ளதாக தெரிவித்தார். சட்டவிரோத செயலில் ஈடுபாடுவதில்லை எனவும், அதிகாரிகளை மிரட்டவில்லை எனவும் விளக்கம் அளித்ததுடன் அதுகுறித்த உத்தரவாதத்தையும் மனுவாக தாக்கல் செய்தார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தனது முறையீடுகளுக்கு நிவாரணம் கேட்க மனுதாரருக்கு உரிமையுள்ளது என்றும், அதை நீதிமன்றமோ அதிகாரிகளோ நெரிக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர். சில அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நபர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஊழலை அம்பலப்படுத்துவதாக கூறி அத்துமீறி செயல்பட்டால், அவர்களுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

கோவில்களுக்கு செல்லும்போது அங்கிருப்பவர்களுடன் தகராறில் ஈடுபடக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், நீதிமன்றத்தையும் மட்டுமே அணுக வேண்டும் என ராதாகிருஷ்ணனுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

சட்டப்படி செயல்படுவதாக உத்தரவாதம் அளித்துள்ளதால் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கை முடித்துவைத்த நீதிபதிகள், கோவில்களில் உள்ள சொத்துகள் நகைகள் முறையாக கையாளப்படாதது குறித்த விஷயங்களை அம்பலப்படுத்துவோரின் குரல்வலையை நெரிக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

You may also like...