அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜராகி விற்பனை செய்யும் நோக்கத்தில் கஞ்சா வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டதாகவும், சாட்சியங்கள் வலுவாக உள்ளதாகவும் கூறி, கடுமையான தண்டனை விதிக்க வேண்டுமென வாதிட்டார்.

ஒன்றரை கிலோவிற்கு மேல் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சூர்யா என்கிற 26 வயது இளைஞர் கஞ்சா விற்பதாக மீன்பிடி துறைமுக காவல் நிலையத்திற்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதடிப்படையில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டபோது, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சூர்யாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி சி.திருமகள் முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது, சூர்யா தரப்பில் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டபோது உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும், தன் தரப்பு சாட்சியங்களை முறையாக விசாரிக்கவில்லை என்றும் வாதிடப்பட்டது.

காவல்துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜராகி விற்பனை செய்யும் நோக்கத்தில் கஞ்சா வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டதாகவும், சாட்சியங்கள் வலுவாக உள்ளதாகவும் கூறி, கடுமையான தண்டனை விதிக்க வேண்டுமென வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி திருமகள் பிறப்பித்த உத்தரவில், குற்றம்சாட்டப்பட்ட சூரியாவிற்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

You may also like...