முதல்வரே, கவனியுங்கள்! * சபரிமலை, அறுபடை வீடு, வேளாங்கண்ணி

முதல்வரே, கவனியுங்கள்!
*
சபரிமலை, அறுபடை வீடு, வேளாங்கண்ணி புனித யாத்திரை செல்பவர்களுக்கு தேவையான மணிமாலைகள் விற்கும் ஒரு கடை.
காலை 11 மணிக்கு ஒரு தம்பதியர் அந்த கடைக்கு வருகின்றனர். இருவர் கைகளிலும் சிராய்ப்பு. ரத்தக்கறை. கணவர், மிதமிஞ்சிய போதையில் இருக்கிறார்.
‘இப்ப எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த?… நான் மாலையெல்லாம் போட மாட்டேன்’ என்கிறார் கணவர். ‘அதெல்லாம் முடியாது. போட்டுத்தான் ஆகணும். முருகா சரணமா? இல்ல வேளாங்கண்ணியா? எதுக்கு மாலை போடுகிறாய்? சொல்லு’ என்கிறார் மனைவி.
ஒருசில நிமிட விவாதத்துக்கு பிறகு அறுபடை என்று முடிவாகிறது. அதற்கு தேவையான உடை, இத்யாதிகள் வாங்கி முடித்ததும் போதையில் நிற்க முடியாமல் தடுமாறி வாசலில் விழுகிறார், கணவர்.
‘என்னை ரத்தம் வர அடிச்ச இல்லே… இப்ப பாரு கீழ விழுந்த; உனக்கு நல்லா வேணும்…’ இது மனைவியின் ஆவேசம். கடை வாசலிலேயே மீண்டும் ஒரு அமளி.
இருவருக்கும் தெரிந்த ஒருவர் அந்த பக்கமாக வர, அந்த பெண்ணிடம் விசாரிக்கிறார். நடந்ததை சொல்லி அந்த பெண் கண்ணீர்விட, ‘‘உன் கணவன் எப்படி மாலை போடுவார்? அவரால சரக்கு அடிக்காம இருக்க முடியாதே?’’ என்கிறார் வந்தவர்.
அதற்கு அந்த பெண், ‘‘இல்லண்ணா… போதை தெளிஞ்சிட்டா நான் என்ன சொன்னாலும் கேட்பார். போதை ஏறினாதான் அடிதடிகள் எல்லாம்… எப்படியாவது இப்ப அவருக்கு மாலை போட்டுடணும். இல்லாட்டி, புத்தாண்டு கொண்டாடுகிறேன் என்று சொல்லி நாளை ராத்திரி தொடங்கி ரெண்டு, மூணு நாளைக்கு வீட்டுக்கே வரமாட்டார்…’’ என்கிறார் அந்த பெண். அரக்கோணம் நகரில் ஒரு கடை வாசலில் கடந்த மாதம் 30ம் தேதி திங்கட்கிழமை காலை நடந்த காட்சிதான் இது.
போதையில் இல்லாவிட்டால் பொண்டாட்டி சொல்லுக்கு மதிப்பு கொடுக்கும் நல்ல குடும்பத் தலைவன்தான். ஆனால் போதைக்கு ஆட்பட்டுவிட்டால், ரத்தக்களறிதான். கணவன் குடிக்காமல் இருக்க வேண்டும் என்றால் மாலை போட்டு விரதமிருக்கச் செய்வது ஒன்றுதான் வழி என்ற நிலை.
இந்த யதார்த்தம் எதைப்பற்றியும் கவலையில்லாமல், மதுபான விற்பனை, நாள் ஒன்றுக்கு 70 கோடி ரூபாய் என்று பணத்தை எண்ணுவதிலேதான் தமிழக அரசு குறியாக இருக்கிறது. பண்டிகை காலங்களில் 200 கோடி ரூபாய் வரை விற்கும்; புத்தாண்டு விற்பனை மட்டும் 315.4 கோடி ரூபாய் என்று அரசு நிறுவனமான டாஸ்மாக் இலக்கு நிர்ணயித்து விற்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த புத்தாண்டில் விற்பனை அமோகம் என்று புள்ளிவிவரம்வேறு.
இப்படி மக்களை குடிக்க வைத்து, அவர்களின் பணத்தை பறித்து, அதில் ஆட்சி நடத்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டாமா?
*

You may also like...