மத்திய அரசு நிறுவனம் என கூறி தமிழ்நாடு நகர்புற நில வரி விதிப்பிலிருந்து விலக்கு கோரிய இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மத்திய அரசு நிறுவனம் என கூறி தமிழ்நாடு நகர்புற நில வரி விதிப்பிலிருந்து விலக்கு கோரிய இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு சொந்தமாக பழந்தாங்கல், பரங்கிமலை, கவுல் பஜார், பரங்கிமலை ஆகிய பகுதிகளில் 1600 கிரவுண்டுக்கும் மேற்பட்ட நிலம் உள்ளது. அந்த நிலங்களுக்கு நகர்புற நில வரியை செலுத்தும்படி 2006 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் ஆலந்தூர் மண்டல உதவி ஆணையர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து விமான நிலையங்கள்ஆணையம் மேற்கொண்ட முறையீட்டை விசாரித்த நில சீர்திருத்த தனி ஆணையர், வரி விதிப்பு உத்தரவை உறுதிசெய்து 2008ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மண்டல செயல் இயக்குனர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வி.ரமேஷ், அரசு தரப்பில் வி.நன்மாறன் ஆகியோர் ஆஜரானார்கள்.

அப்போது, விமான நிலையங்கள்ஆணையம் தரப்பில், மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான நிலங்களுக்கு நகர்புற நில வரி விதிக்க தேவையில்லை என தமிழ்நாடு நகர்புற நில வரி சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை மீறி, மத்திய அரசின் நிறுவனமான தங்களுக்கு வரி விதித்தது விதிமீறல் என்றும் வாதிடப்பட்டது. சர்வதேச மற்றும் தேசிய விமான நிலையங்களை இயக்குவதற்காக நாடாளுமன்ற சட்டத்தால் அமைக்கப்பட்ட ஆணையம் என்பதால் அரசு என்ற வரம்பில் வரும் என்பதால், வரி விதித்தது செல்லாது என வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அந்த ஆணையம் என்பது விமான நிலைய மேம்பாட்டிற்காக மட்டுமே அமைக்கப்பட்டது என்றும், மத்திய அரசு நிறுவனம் என கூறி உள்ளாட்சி அமைப்புகளின் வரி விதிப்புகளில் விலக்குபெற முடியாது என்றும் உத்தரவிட்டிருந்ததை சுட்டிக்காட்டப்பட்டது. விமான நிலையங்கள் ஆணையம் என்பது பொதுத் துறை நிறுவனம் தானே தவிர நேரடியாக மத்திய அரசு நிறுவனம் என கூறமுடியாது என்பதால், வரிவிதிப்பிலிருந்து விலக்கு கோர முடியாது என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த தீர்ப்பில், விமான நிலையங்கள்ஆணையத்தை மத்திய அரசு நிறுவனமாக கருத முடியாது என்ற தமிழ்நாடு அரசு விளக்கத்தை ஏற்று, தமிழ்நாடு நகர்புற நில வரி சட்டத்தின்படி விதிக்கப்பட்ட வரிவிதிப்பை உறுதி செய்ததுடன், விமான நிலையங்கள் ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

அரசு நிர்ணயித்த நகர்புற நில வரியில் இடைக்கால உத்தரவின்படி ஏற்கனவே 50 சதவீதம் செலுத்தப்பட்டுவிட்டதால், மீதமுள்ள வரியை 4 மாதங்களில் செலுத்தும்படி விமான நிலையங்கள் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

AAI vs TNG ULT SMSJ.pdf

You may also like...