நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், R.பூர்ணிமா
மனைவி படம் பார்ப்பதும், இன்பம் அடைவதும் கொடுமைப்படுத்துவது ஆகாது – விவாகரத்து கோரிய கணவனின் மனு தள்ளுபடி : ஐகோர்ட் மதுரை அமர்வு தீர்ப்பு
மனைவியாகிவிட்டார் என்பதற்காக அடிப்படை உரிமையை மறுக்க முடியாது, மனைவியின் தனியுரிமைக்கான வரையறையில், பாலியல் சுதந்திரத்தின் அம்சங்களும் அடங்கியுள்ளன என நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்து, விவாகரத்து வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கணவன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்ற தானும், அதேபோல விவாகரத்து பெற்ற பெண்ணை திருமணம் செய்து 6 ஆண்டுகள் கடந்தாலும் குழந்தைகள் யாதும் இல்லை என்றும் கூறி, 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதால், மனைவியிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
மனைவிக்கு பாலியல் நோய் உள்ளது, ஆபாச படங்களை பார்த்து சுயஇன்பத்தில் ஈடுபடுகிறார், அதிக நேரம் போனிலேயே இருக்கிறார், வீட்டு வேலைகளை செய்வதில்லை, தன்னையும், தன் பெற்றோரையும் மதிக்கவில்லை, அதிக செலவுகளை செய்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளை மனுதாரர் தன் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், R.பூர்ணிமா ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில், மனைவி பாலியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு எந்த மருத்துவ அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை, ஒருவேளை மனைவிக்கு பாலியல் நோய் இருந்திருந்தால் இருவரும் 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளதால் மனுதாரருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும், ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை என்பதை குறிப்பிட்டுள்ளனர். தன் மனைவிக்கு பெண்கள் தொடர்பான நோய் இருப்பதாக மனுதாரர் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதுவும் எளிதில் குணப்படுத்தக்கூடியதே என்றும் கூறியுள்ளனர்.
மனைவி ஆபாச படங்களை பார்த்து சுயஇன்பத்தில் ஈடுபடுகிறார் என்ற மனுதாரரின் குற்றச்சாட்டை கையாண்ட நீதிபதிகள், தடை செய்யப்பட்ட வகையை தவிர்த்து தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமாகாது என்றும், அதேசமயம் ஆபாச படங்களுக்கு அடிமையாவது தவறு என்றும் அறிவுறுத்தியதுடன், ஆண் சுயஇன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் சூழலில், பெண் சுயஇன்பத்தில் ஈடுபடுவதை குற்றமாக கருத முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுய இன்பத்தில் ஈடுபடுவது இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு தரவுகள் எதுவும் இல்லை என்றும், அது தடைசெய்யப்பட்டதல்ல என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே மனைவி ஆபாச படங்களை பார்ப்பதும், சுய இன்பத்தில் ஈடுபடுவதும் தன் கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது என உத்தரவிட்ட நீதிபதிகள், தனியுரிமை என்பது அடிப்படை உரிமையாக உள்ளது என்றும், இது திருமண உறவுகளில் இருப்பவர்களுக்கும் பொருந்தும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு மனைவியாக மாறும் பெண்ணின் தனியுரிமைக்கான வரையறையில் பாலியல் சுதந்திரத்தின் பல்வேறு அம்சங்களும் அடங்கியுள்ளன என்றும், ஒரு பெண் மனைவியாகிவிட்டார் என்பதற்காக அவரது அடிப்படை உரிமையை மறுக்க முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
மனைவி மீது மனுதாரர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதிகள் G.R.சுவாமிநாதன், R.பூர்ணிமா ஆகியோர், அவை உண்மையாக இருப்பினும் அந்த குற்றச்சாட்டுகள் சட்டப்படி விவாகரத்து கோருவதற்கான காரணங்கள் இல்லை என கூறி, விவாகரத்து கோரி கணவன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.