நீதிபதிகள் மற்றும அவர்கள் குடும்பத்தினர் குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் அவதூறு விடியோ வெளியிட்ட விவகாரத்தில், சட்ட விரோத சக்திகளுக்கு தொடர்புள்ளதா என விசாரணை நடத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நீதிபதிகள் மற்றும அவர்கள் குடும்பத்தினர் குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் அவதூறு விடியோ வெளியிட்ட விவகாரத்தில், சட்ட விரோத சக்திகளுக்கு தொடர்புள்ளதா என விசாரணை நடத்த காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும், நீதிமன்ற ஊழியர்களையும் ஆபாசமாக விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். இதுதொடர்பாக அவருக்கு எதிராக வழக்கறிஞர் தேவிகா புகாரில் வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அவரது வீடியோக்களை முடக்க யூ டியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் ராஜகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,
கர்ணன் பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களை நீக்க சமூக வலைதளங்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

கடந்த விசாரணையின்போது மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், நீதிபதி கர்ணனின் வாக்குமூலத்தை மூடி முத்திரையிட்ட உரையிலும் தாக்கல் செய்தார்.

பின்னர் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன்பு இன்று நேரில் ஆஜரானார்கள்.

அப்போது காவல்துறை தரப்பில் புகார் மீது நடவடிக்கை எடுக்கபட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனின் செயல்பாடுகளுக்கு பின்னால் சட்டவிரோத சக்திகளின் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கவும், விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் அடுத்தடுத்த விசாரணைகளின்போது, டிஜிபியும், காவல் ஆணையரும் ஆஜராக தேவையில்லை என விலக்கு அளித்தும் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME